Sunday, February 19, 2006

தாயைக் காத்த வைணவர்கள் - அன்பு செல்வன்

விஷ்ணுவின் மற்ற எந்த அவதாரங்களையும் விட ராமாவதாரம் அதிக சர்ச்சைக்கு உட்பட்ட அவதாரமாகும்.அதிக அளவில் பட்டிமண்டபங்களில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்ட விஷ்ணு அவதாரம் ராமாவதாரமாகத் தான் இருக்கும்.சீதையை ஏன் தீக்குளிக்க சொன்னான் ராமன் என்பது பட்டிமணடப வக்கில்கள் மட்டும் எழுப்பும் சர்ச்சையல்ல,பொதுமக்கள் துவங்கி பரமபாகவத வைணவர்கள் வரை நடக்கும் சர்ச்சையாகும்.

சீதை வைணவர்களுக்கு தாய் போன்றவள்.சீதையை வைஷ்ணவர்கள் அழைப்பதே தாயார் என்றுதான்.தாயை கதாநாயகியாக்கி கதை எழுதும்போது ஒரு மகனுக்கு என்னென்ன பிரச்சனை வருமோ அதெல்லாம் ராமாயணத்தை எழுதிய வைஷ்ணவர்களுக்கும் வந்தது.

மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வைஷ்ணவர்களுக்கு இருந்த மிகப்பெரும் பிரச்சனை சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனது.அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு ராமன் பேசியது,அவள் தீக்குளித்தது ஆகும்.தாயின் கற்பின் மீது சர்ச்சை நடப்பதை,அதுவும் வைணவர்களின் கண்கண்ட கடவுளான ராமனே அம்மாதிரி செய்ததை வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

மேலும் சீதையை ராவணன் எப்படி தொடவிடலாம்?தாயை ஒருவன் தவறான எண்ணத்தில் தொட்டான் என்பதை ராமாயணம் எழுதிய வைஷ்ணவர்களால் தாங்கவே முடியவில்லை.

வால்மிகியின் மூல ராமாயணத்தில் இதை எப்படி சொல்லியிருக்கிறார் என பாருங்கள்.

வாமேன சீடாம் பட்மாக்ஸீம் மூர்தஜெஸு கரெண சக
ஊர்வொடு தஷீணென ஏவ பரிஜக்ராக பாணினா
டட தாம் பருஸை வாக்யை அப்கிடர்ஜ்ய மகாச்வன
அன்கென ஆதாய வைதேகீம் ரதம் ஆரோபயட் டடா

இடக்கரத்தால் தாமரைக் கண்ணினாளின் முடியையும் வலக்கரத்தால் அவள் காலையும் பற்றி அவளை இழுத்தான்.கொடுமொழிகள் பேசி அவளை மிரட்டியபடி தேரிலேற்றி கடத்திச்சென்றான்.(எனக்கே மனம் பொறாமல் வால்மிகியின் சிலவரிகளை சென்சார் செய்துவிட்டேன்)

இப்படி வால்மிகி எழுதிவைத்துவிட்டார்.பிற்காலத்தில் வந்த வைஷ்ணவர்களால் அதை தாங்க முடியவில்லை.ராமாயணம் பாடும்போது இந்த இடம் வரும்போது இதை எழுதவே அவர்களுக்கு மனம் வரவில்லை.பரமபாகவதனான கம்பன் இந்த இடத்தை எப்படி கையாள்கிறான் என்று பாருங்கள்.

ஆண்டு, ஆயிடை, தீயவன் ஆயிழையைத்
தீண்டான், அயன் மேல் உரை சிந்தைசெயா;
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால்,
கீண்டான் நிலம்; யோசனை கிழொடு மேல். 72

"ஆயிழையைத் தீண்டான்" என எழுதுகிறார் கம்பர்.சீதையை ராவணன் தொடுவதை அவர் விரும்பவே இல்லை.பர்ணசாலையை ஒரு யோசனை நிலத்தோடு சேர்த்துப் பெயர்த்து சீதையை தூக்கிக்கொண்டு போனான்,சீதையை தொடவில்லை என அழுத்தம் திருத்தமாக எழுதுகிறார்.

இவராவது பரவாயில்லை.இவருக்கு பின்வந்த வைஷ்ணவர்களால் சீதை ராவணன் வீட்டில் இருந்தாள் என்பதையே தாங்க முடியவில்லை.சீதையை ராமன் சந்தேகப்பட்டான் என எழுதவும் மனம் இடம்தரவில்லை.15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆத்யாத்ம ராமாயணத்தில் ராமன் ஒரு மாயா சீதையை உருவாக்குகிறார்.ராவணன் வருவது அவருக்கு தெரிந்ததும் உண்மை சீதையை அக்னியிடம் பாதுகாப்புக்காக ஒப்படைக்கிறார்.நிழல் சீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போகிறான்.

பிறகு அவதார நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதற்காக ராமன் அழுவதுபோல் மாய விளையாட்டு காட்டுகிறார்.ராவணனை கொல்கிறார்.அக்னியை அழைத்து தன் மனைவியை திரும்பப்பெற்றுக்கொண்டு நிழல் சீதையை அக்னியிடம் சேர்க்கிறார்.

16ம் நூற்றாண்டில் துளசிதாசர் இந்த முறையையே கையாள்கிறார்.ஆத்யாத்ம ராமாயணம் சொல்வது போலவே இவரும் நிழல் சீதையை தான் ராவணன் கொண்டுபோனான் என எழுதுகிறார்.

வேதவதி என இன்னொரு பெண்ணைத்தான் ராவணன் கொண்டுபோனான் என சொல்லும் ராமாயணங்களும் உண்டு.சீதையை ராவணனின் மகளாக சொன்ன ராமாயணங்களும் உண்டு.தந்தை வீட்டில் மகள் இருப்பது தவறில்லை அல்லவா?

தாய் மீது வைஷ்ணவர்கள் கொண்ட பாசம் வால்மீகியை எடுத்து விழுங்கிவிட்டது.வால்மீகி எழுதியதை ஒப்புக்கொள்ள இவர்கள் யாரும் தயாராக இல்லை.

தாய்ப்பாசத்தின் சக்தி அப்படி

1 Comments:

At 5:40 PM, Anonymous Anonymous said...

"தாயையும் தண்ணீரையும் பழிக்ககவே
கூடாதென்று சொல்வார்கள்!..அன்னையே முதல் தெய்வம் அல்லவா?...

சுதனின்விஜி

 

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4