Thursday, March 09, 2006

காகிதப் பூக்கள்... (நிலாரசிகன்)

என் இனிய தோழனே..
நலமா ? வெகு நாட்கள் கழித்து இன்று உனக்கொரு நீண்ட மடல் எழுதுகிறேன் .
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், நான் வளர்க்கும் நாய்க்குட்டி உட்பட. ஜன்னலோரம் அமர்ந்து தோழன் உனக்கு கடிதம் எழுதுகின்ற தருணங்கள் மட்டுமே என் இதயம் சிலிர்க்கின்ற அதிஅற்புத தருணங்கள்.
என் அறை முதல் மாடியில் இருப்பது இன்னும் வசதி, என் தெரு முழுவதும் நன்றாக தெரியும் ...
இந்த பின்னிரவில் யாருமற்ற தெருவின் அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழனே ..
பகலெல்லாம் மிதிபடுகின்ற தெருவிற்கு இரவில் வானம் பனித்துளிகளால் ஒத்தடம் கொடுப்பதை பார்க்க இரு கண்கள் போதாது நண்பனே!

அதோ தூரத்தில் ஒரே ஒரு தெரு விளக்கு ...பகலெல்லாம் கண்மூடி, இரவெல்லாம் விழித்திருக்கும் இறும்புக்காவலன் அல்லவா இந்த விளக்கு!
காவல் மனிதர்களுக்கா இல்லை தெருவிற்கா?

எனக்கொரு சந்தேகம்...

இரவானால் இந் த விளக்கை சிறு சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டே
இருக்கும் .... அப்படி என்னதான் பேசுவார்கள் இந்த வெளிச்சக்காதலனிடம்
இந்த காதல்பூச்சிகள்?

சரி இப்படியே போனால் உன்னிடம் சொல்ல வந்ததையே நான் மறந்துவிடுவேன்..
இன்று என்ன நாள் என்று உனக்கு நினைவிருக்கிறதா தோழா ?

இன்று என் திருமண நாள். பார்! எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஓடோடி விட்டது!

திருமணத்திற்கு முன்பு பட்டுப்பாவாடையும் ,ரெட்டை ஜடையும் , கைகளில் புத்தகத்தையும் நெஞ்சில் கனவுகளையும் சுமந்து திரிந்த என் கிராமத்து கல்லூரி நாட்கள் நினைத்தால் எவ்வளவு சுகமான சுமையாய் இருக்கிறது தெரியுமா?

ஒரு பெண் தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிற அழகான நாட்கள் அவை.

தோழிகளுடன் அரட்டையும், ஓரக்கண்ணில் ஓராயிரம் ஆண்களை அடிமையாக்கி திமிராய் நடந்த நாட்கள் அல்லவா அவை !

எவ்வளவு கனவுகள்....எவ்வளவு ஆசைகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்ற நண்பர்கள் ... என்று அந்த இளமைக்கால வாழ்க்கை திரும்பி கிடைக்குமா ?

என் கழுத்தில் தாலி கட்டிய அன்றே என் கனவுகளுக்கும் அல்லவா வேலி கட்டப்பட்டது!

சின்ன சின்ன விசயங்களையும் பகிர வேண்டும் என் துணைவன் என்கிற என் சிறிய ஆசையிலும்
முட்கள் விழுந்தது ஏன் தோழா ?

முதலிரவில் என் உள்ளங்கை பற்றி என் விருப்பங்கள், கனவுகள், ஆசைகள், வெறுப்புகள் என்று ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டு நட்சத்திரங்களாய் கண்கள் சிமிட்டுவான் என்று நினைத்து , ஏமாந்து கறுப்புவானமாய் இரவில் கரைந்தது என் தவறா நண்பனே?

ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். பேருந்து கிடைக்காத காரணத்தால் தாமதமாக நான் வீடு வந்த பொழுது மதம்பிடித்து அவன் கேட்ட கேள்விகள்....
அன்றுதான் முதன்முதலில் உணர்ந்தேன்...உலகில் பேய்களும் உண்டு என்று ..
சந்தேகக் கண்களோடு அலைகின்ற புருஷப்பேய்கள்!...

"பெண்ணாய் பிறத்தல் புண்ணியம். பெண் நினனத்தால் எதுவும் செய்ய முடியும் . பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்"

இப்படியெல்லாம் பள்ளியில் பேச்சுப்போட்டியில் பேசியவள்தான் நான். இன்று பேச வார்த்தைகளற்று மெளனத்திற்கே மெளனமொழி கற்றுத் தருகிறேன் நண்பா...

என் கணவன் குடிப்பவனில்லை. மனதில் அடிப்பவன்.
என் கணவன் பெண்பித்தனில்லை .
வார்த்தைக்கத்தியால் இந்த சின்னப்புறாவை தினம் தினம் சமைப்பவன்.
சந்தேக அம்புகளால் என் தேகத்தை துளைப்பவன் .

தோழா ஒன்று தெரியுமா நான் இறந்தால் எனக்கு கண்டிப்பாய் சொர்க்கம்தான். இந்த மண்ணுலகில் நரகத்தில் வாழ்கிறேனே! இல்லை இல்லை நரகத்தோடு வாழ்கிறேனே...

சரி என் சோகம் முழுவதும் சொன்னால் நீ கண்ணீரில் கரைந்துவிடுவாய்..

நேற்று ஒரு கவிதை எழுதினேன்...

தனியாய் இருந்தேன்
துணையாய்
தனிமை"

எப்படி இருக்கிறது நண்பா?

ஒரு நல்ல செய்தி சொல்ல மறந்து விட்டேனே !
அந்த புருஷப்பேய்க்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது ! அதுவும் எப்படி ? எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால்

அந்த வேதாளம் வேறொரு பெண்மரம் தேடி போய்விட்டது. போனமாதம்தான் நாங்கள் நிரந்தரமாக பிரிந்தோம் நண்பா ..

சரி இனியாவது வாழ்க்கையின் அழகை ரசிக்கலாம் என்று நினைத்தேன்....
ஆனால் இந்த முட்டாள் சமுதாயம் எனக்கு எத்தனை பெயர் தருகிறது பார் தோழனே !

1. என் வீட்டில் என் பெயர் வாழாவெட்டி(ஆனாலும் என் சம்பளம் இனி
முழுவதுமாக கொடுக்க வேண்டுமாம் !!)
2. தெருவோர டீக்கடை ரோமியோக்கள் வைத்திருக்கும் பெயர் தனிக்கட்டை!( கட்டைல போயிருவீங்கடான்னு திட்ட நினைத்தேன். வார்த்தைகளை செலவிட விரும்பாமல் திரும்பிவிட்டேன்)
3.குழாயடிப் பெண்களிடம் என் பெயர் " பொழைக்க தெரியாதவ " (அதனால்தான் நான் சம்பாதிக்கிறேன் .. இதுகள் மெகா சீரியலில் மூழ்கி கிடக்கறதுகள்!)

ம்ம் .....இப்படி நிறைய...என் அலுவலகத்தில் ஒரு பெயர் ...தோழிகளிடத்தில் ஒரு பெயர் ....

சரி அதுகிடக்கட்டும் .... இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன் ஒரு ரோஜா செடி வளர்க்கிறேன் .. என் அறை ஜன்னலோரம் அந்த ரோஜா தொட்டி இருக்கிறது ...

அது நேற்று ஒரு சின்ன மொட்டு விட்டிருந்தது...
எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா ? அப்படியே அள்ளிக்கலாம்
போல இருந்துச்சு டா..

ஆனா இன்னைக்கு காலைல பூவா மாறாம அப்படியே உதிர்ந்து போச்சுது....

சே... அந்த மொட்டுக்கு எவ்ளோ ஆசையா இருந்திருக்கும் இந்த உலகத்தை பார்க்க.... பாவம் அது கொடுத்து வச்சது அவ்வளவுதான் ..

சரி ரொம்ப நேரமாச்சு அடுத்த மடல்ல நாம நிறைய பேசுவோம் சரியா?

நீ ஒழுங்கா சாப்பிடுடா....

என்றும் உன் தோள்தேடும்
உன் ப்ரிய தோழி .

கடிதம் எழுதி முடித்தாள் அவள்.

எழுதிய கடிதத்தை மறுநாள் அருகிலிருக்கும் கோவிலில் சென்று வைத்து விட்டு திரும்பினாள்
அவள். அவள் எழுதிய கடிதம் கடவுளுக்கு ....

ஆம் ...அவளுக்கு தோழன் என்றால் அது
கடவுள் மட்டுமே !

இவள் போல் மனசிற்குள் ஆயிரம் ஆசைப்பூக்களிருந்தும் இந்த சமுதாயத்தில் காகித பூக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனையோ….

இது ஒரு பெண்ணை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டாலும்

இந்தக் கடிதத்தில் வருகின்ற "சந்தேக கணவன்" (கள்) இலட்சத்தில் ஒருவராவது இதைப் படித்து
திருந்தினால்

காகிதப்பூக்களும் இனி மணம் வீசும்!

நம்பிக்கையுடன ,
நிலாரசிகன்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4