Sunday, May 21, 2006

பாண்டியர் காவியம்- இரவா

அணிந்துரை
வீரத்தின் விளைநிலம் தமிழகம்! வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல், உயிர்ச் சொல் வீரம். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மருது வரலாறு அதற்குச் சான்று! சிறுவர்தம் சீரிய உள்ளங்களில் சிந்தைகுளிர, வீரம் மிளிரப் பாடி மகிழ்ந்திருக்கிறார் இரவா - கபிலன். சுதந்திர தீபம் இரவா-கபிலனின் கற்பனைத் திறன் பற்றி உலகுக்குணர்த்தும் உயரிய காவியம்.

இக்காவியத்தை ஆழ்ந்து படித்து இன்புற்றேன். கவிஞரின் திறன் கண்டு வியந்தேன்.

வைகை வர்ணனை :- .
வைகைப் பெண்ணைத் தன் சொல்லோவியம் கொண்டு அலங்கரித்து நம் உள்ளங்களைல் உலவ விட்டுள்ளார் கவிஞர்.
"இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்"
என்றும்,
"புதுமனை புகுந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல,

வதுவைபோல் வந்த வைகை"
என்றும் சுவையோடும் கற்பனை நயத்தோடும் வர்ணிக்கிறார்.

"செல்வத்தின் செல்வ மான
சிரஞ்சிவி வைகைப் பெண்ணாள்"
என்று கொஞ்சி மகிழ்கிறார்.

வைகை பற்றிக் கவிதை தீட்டும் கவிஞரின் திறன் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்றதோர் சுவையமுதை நினைவூட்டவல்லது.

வீரம் :-
மருது பாண்டியரின் வீர வரலாற்றே இச்சிறு காவியத்தின் உயிர் நாடி. வீரத்தை விளைக்கும் வரிகளே முதலிலிருந்து இறுதிவரை துள்ளி வந்து இதயத்தை அள்ளி விடுகின்றன.
எடுத்துக் காட்டாய் சில வரிகள் இதோ ..... !
"கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொ டாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
..... ..... ....
ஆண்டிகள் போல வந்த
அந்நிய வெள்ளை நீங்கள்
பாண்டியர் எம்மைப் பார்த்துப்
பரம்பரை கேட்கின் றாயா?"

"பாளையக் காரர் தம்மைப்
பரங்கியர் கேலி செய்தால்
கூளங்கள் போலச் செய்வோம்
குருதியில் குளிக்க வைப்போம்!

கோழையின் நெஞ்சிலே வீரமெனும் குருதியோட வைக்கும் கூரிய வரிகள்!
"உய்வதோ கொஞ்ச நாள்தான்
உரிமையும் இழந்து விட்டால்
அய்யமும் கொள்ளு வாரே
அருமையாய் நம்மைப் பெற்றோர்!"
என்று, மருது கூறும் வரிகள், மனோன்மணியத்தில் ஜீவகன் தன் படைகளுக்குக் கூறும் வீரவரிகளுக்கு இணையாக உள்ளன.
வடுகநாதரின் வீரத்தைக் குறிக்கும் வகையால்
"நின்றவர் நின்ற வாறே
நெருப்பென வாளை வீசிக்
கண்ணிமை இமைக்கு முன்னே
களத்தினில் பலரை வீழ்த்தும்"
என்று பாராட்டி வீரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் ஆற்றல் சிறப்புக்குரியது.
"வெற்றிமகள் வருகை கண்டு
வேல்வீர மறக்குலத்து மாத ரெல்லாம்
சூலுற்ற வயிற்றையும் பெருமை யோடு
சுகமாகத் தடவிநிற்கும் தாய்மை யுண்டு"
என்று கூறும் வரிகள் அப்படியே புறநானூற்று வீரத்தாய்மார்களை நினையூட்டுகின்றன.

போர்க் களக்காட்சிகள்:
"விருந்துக்கும் வேட்கைக்கும்
ஆசை கொண்டு
பருந்துகளோ திரண்டுவந்து
வானை மூடும்"
என்றும்,

"முண்டங்கள் குன்று போலும்
முரிந்துவீழ் கைகால் எல்லாம்
துண்டங்கள் செய்த வாழைத்
துணுக்கெனக் கிடந்த தம்மா"

என்றும், போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாங்கு கலிங்கத்துப் பரணிக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன்.

உவமை:
அணிகளில் சிறந்தது உவமையணி. தமிழ் நாட்டுப் பாட்டிகள் வாயிலிருந்தும் வருவது உவமை அருவி. அத்தகு உவமையணியை ஏனோ கவிஞர் வெறுத்து விட்டார். ஓரிரு உவமை தவிர ஒளிமிகு காவியத்தில் உவமைகளைத் தேடி அலைந்தாலும் கிடைக்கவில்லை. அதனால் தானோ ஓரிடத்தில்,
"உவமானம் எதைச் சொல்லி உரைப்பேன்?" என்று கூறுகிறார்.

தலைவனை இழந்த படையின் நிலையைக் குறிக்கும் போது,
"இதயந்தான் மடிந்தபின்னே
உடலி லுள்ள
இருகரமும் கால்களுமே
என்ன செய்யும்"
என்று கூறும் போது ஓரிரு உவமைகள் தந்தாலும் உள்ளம் சிலிர்க்கச் செய்யும் உவமைகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.
பொம்மை ராஜாவாக உடைய தேவனுக்கு முடிசூட்டுவதைக் கவிஞர், "அம்மிக்கு அலங்காரம் செய்வதைப் போல்" என்று கூறுவது உவமையின் உச்சிக்கே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

சமதர்ம நோக்கு:
மருது பாண்டியன் கூற்றாக,
"முறையறிந்த மன்னவராய் இருந்தால் மட்டும்
முழுநிறைவு வாராது! மக்கள் நெஞ்சால்
நிறைவுகொளச் சமதர்மம் காணும் போதே
நீதியின் மைந்தரென ஏற்றுக் கொள்வார்"
என்று முடியாட்சி மன்னனும் சமதர்ம சமுதாயம் படைக்க விழைந்து கூறுவதன் மூலம் கவிஞரின் சமதர்ம நோக்கு தெளிவாக விளங்குகிறது.

தேர் செய்த சிற்பியை மன்னனெனச் செய்யும் நிகழ்ச்சியில்,
"தொழிலொன்றே முதலாகக் கொண்டு வாழும்
தொழிலாளி தானிந்த மன்னின் மன்னன்!"
என்று கூறுவதும் பாரதிதாசன் கவிதையில் தொடங்கிவைத்த சமதர்ம சிந்தனைக்குச் சீர் கூட்டுவதாக அமைந்துள்ளது.

சூழ்ச்சி:
சூழ்ச்சி இல்லாத காவியம் சுவைபடாது. மருது பாண்டியர் காவியத்திலும் சூழ்ச்சி உண்டு. சூழ்ச்சியின் மறு உருவான தொண்டைமானை,
"சொல்லாலே அன்புதனை வாரி வீசிச்
சூழ்ச்சியை நெஞ்சிற்குள் மறைத்து வைத்தே
எல்லோரும் எம்தோழர் இனியோர் என்றே
இனிப்பொழுகப் பேசுகின்ற தொண்டை மானும்"
என்று கூறுவது,
"கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்
கொடுங்கொடியோன் நரிக்கண்ணன் ......."
என்று பாண்டியன் பரிசில் பாரதிதாசன் கூறுவதற்கு ஒப்பாகச் சிறப்பு வாய்ந்த வரிகள்.

சாதி எதிர்ப்பு:
அன்றும் இன்றும் சாதியின் கொடிய கரங்களிலே சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைஇன்பம் கவிஞருக்கு எழுந்துள்ளது. அதைக் கூறுமுகத்தால்,
"மருதுவின் சேர்வைச் சாதி
மண்ணிலே தாழ்ந்த தென்று
கருதிய உடைய தேவன்
கக்கினான் பொய்யை ஊரில்!
விருதெனும் வீர மெல்லாம்
வீணது சாதிச் சொல்லால்!"

என்று சொல்லும் போது சாதியின் முன்னே சாதனைகள் மண்டியிடும் என்பார் கவிஞர். சாதியிலிருந்து தமிழ்ச் சமுதாயம் மீள்வது எந்நாளோ?

போரினும் அமைதியே சிறந்தது:
வீரர்க்குப் போர்க்களம் விருந்து மேடை! வெற்றியெனும் கனிதன்னை அருந்தும் மேடை! நாட்டைக் காக்கப் போரிடலாம்! ஆனால், போரே வாழ்வு என்றால் நாடு சுடுகாடாய் மாறும்! அமைதியில் பூப்பதுதான் முன்னேற்றம் என்னும் அழகுப்பூ! இத்தகு உயரிய சிந்தனை கவிஞரின் கவிதையிலே உன்னதமாய் வெளிப்படுகிறது.
"போருக்கு வாடா என்று
போர்க்களம் நோக்கி நாமும்
போருக்கே அணிவ குத்தால்
போருக்குப் பின்னே நாடு
சீரற்று, சிறப்பு மற்று
சிவகங்கைச் சீமை மக்கள்
வேருக்குள் வெந்நீர் விட்டால்
விளைவுகள் என்ன வாகும்?"
என்று கூறும் போது விடுதலைக்குப் பிறகு பல போர்களைச் சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நடக்கத் தடுமாறும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா?

கவித்திறன்:
மருது பாண்டியரின் வீர வரலாற்றைக் குறைவு படாமல் சுவையுடனும் தடைகாணா நடையுடனும் கூறியிருப்பது பாராட்டுக்குறியது. வேகம்! வேகம்! வேகம்! எந்த இடத்திலும் வேகத்தடையில்லை!
விருத்தங்களினால் அமைந்துள்ள இந்தக் காவியம் கற்கண்டுத் துண்டுகளாக இனிக்கின்றது.
கதையினைச் சொல்லி முடிக்க வேண்டுமே என்று, கவிஞர் ஓடும் வேகம் தெரிகிறது. சில இடங்களில் நின்று இன்னும் இலக்கியச் சுவைகளைத் தூவ முயற்சி செய்திருக்கலாம்!
எனினும் 'உணர்ச்சியே கவிதையின் உயிர் நாடி' என்பதை உணர்ந்து வீரம் வரும் போது எழுந்தும், சோகம் வரும் போது விழுந்தும், இன்பம் வரும் போது மகிழ்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும் மாறத் தவறவில்லை கவிஞர்! கோபம் வரும் போது எல்லை மீறிச் சொற்கள் வருவதும் சுவையாகத்தான் உள்ளது. இத்தகு நாடகப் பாங்கு (dramatic style) கம்பனைப்போல் இவரிடமும் அமைந்துள்ளது பாரட்டத்தக்கது.

இந்தக் காவியம் இரவா-கபிலனின் முதல் முயற்சி! இன்னும் பல வெற்றிகளை இவர் அடைவது உறுதி! உழைப்பும் ஆற்றலும் கற்பனைஇன்பம் கவித்திறம் உள்ள இக்கவிஞரைப் பாராட்டுவது என் கடமை!
அன்பன்
மு. பகத்சிங்

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4