Thursday, March 09, 2006

காகிதப் பூக்கள்... (நிலாரசிகன்)

என் இனிய தோழனே..
நலமா ? வெகு நாட்கள் கழித்து இன்று உனக்கொரு நீண்ட மடல் எழுதுகிறேன் .
எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், நான் வளர்க்கும் நாய்க்குட்டி உட்பட. ஜன்னலோரம் அமர்ந்து தோழன் உனக்கு கடிதம் எழுதுகின்ற தருணங்கள் மட்டுமே என் இதயம் சிலிர்க்கின்ற அதிஅற்புத தருணங்கள்.
என் அறை முதல் மாடியில் இருப்பது இன்னும் வசதி, என் தெரு முழுவதும் நன்றாக தெரியும் ...
இந்த பின்னிரவில் யாருமற்ற தெருவின் அமைதி எனக்கு ரொம்ப பிடிக்கும் தோழனே ..
பகலெல்லாம் மிதிபடுகின்ற தெருவிற்கு இரவில் வானம் பனித்துளிகளால் ஒத்தடம் கொடுப்பதை பார்க்க இரு கண்கள் போதாது நண்பனே!

அதோ தூரத்தில் ஒரே ஒரு தெரு விளக்கு ...பகலெல்லாம் கண்மூடி, இரவெல்லாம் விழித்திருக்கும் இறும்புக்காவலன் அல்லவா இந்த விளக்கு!
காவல் மனிதர்களுக்கா இல்லை தெருவிற்கா?

எனக்கொரு சந்தேகம்...

இரவானால் இந் த விளக்கை சிறு சிறு பூச்சிகள் சுற்றிக் கொண்டே
இருக்கும் .... அப்படி என்னதான் பேசுவார்கள் இந்த வெளிச்சக்காதலனிடம்
இந்த காதல்பூச்சிகள்?

சரி இப்படியே போனால் உன்னிடம் சொல்ல வந்ததையே நான் மறந்துவிடுவேன்..
இன்று என்ன நாள் என்று உனக்கு நினைவிருக்கிறதா தோழா ?

இன்று என் திருமண நாள். பார்! எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஓடோடி விட்டது!

திருமணத்திற்கு முன்பு பட்டுப்பாவாடையும் ,ரெட்டை ஜடையும் , கைகளில் புத்தகத்தையும் நெஞ்சில் கனவுகளையும் சுமந்து திரிந்த என் கிராமத்து கல்லூரி நாட்கள் நினைத்தால் எவ்வளவு சுகமான சுமையாய் இருக்கிறது தெரியுமா?

ஒரு பெண் தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு காண்கிற அழகான நாட்கள் அவை.

தோழிகளுடன் அரட்டையும், ஓரக்கண்ணில் ஓராயிரம் ஆண்களை அடிமையாக்கி திமிராய் நடந்த நாட்கள் அல்லவா அவை !

எவ்வளவு கனவுகள்....எவ்வளவு ஆசைகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்கின்ற நண்பர்கள் ... என்று அந்த இளமைக்கால வாழ்க்கை திரும்பி கிடைக்குமா ?

என் கழுத்தில் தாலி கட்டிய அன்றே என் கனவுகளுக்கும் அல்லவா வேலி கட்டப்பட்டது!

சின்ன சின்ன விசயங்களையும் பகிர வேண்டும் என் துணைவன் என்கிற என் சிறிய ஆசையிலும்
முட்கள் விழுந்தது ஏன் தோழா ?

முதலிரவில் என் உள்ளங்கை பற்றி என் விருப்பங்கள், கனவுகள், ஆசைகள், வெறுப்புகள் என்று ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டு நட்சத்திரங்களாய் கண்கள் சிமிட்டுவான் என்று நினைத்து , ஏமாந்து கறுப்புவானமாய் இரவில் கரைந்தது என் தவறா நண்பனே?

ஒரு நாள் அலுவலகம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்தேன். பேருந்து கிடைக்காத காரணத்தால் தாமதமாக நான் வீடு வந்த பொழுது மதம்பிடித்து அவன் கேட்ட கேள்விகள்....
அன்றுதான் முதன்முதலில் உணர்ந்தேன்...உலகில் பேய்களும் உண்டு என்று ..
சந்தேகக் கண்களோடு அலைகின்ற புருஷப்பேய்கள்!...

"பெண்ணாய் பிறத்தல் புண்ணியம். பெண் நினனத்தால் எதுவும் செய்ய முடியும் . பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்"

இப்படியெல்லாம் பள்ளியில் பேச்சுப்போட்டியில் பேசியவள்தான் நான். இன்று பேச வார்த்தைகளற்று மெளனத்திற்கே மெளனமொழி கற்றுத் தருகிறேன் நண்பா...

என் கணவன் குடிப்பவனில்லை. மனதில் அடிப்பவன்.
என் கணவன் பெண்பித்தனில்லை .
வார்த்தைக்கத்தியால் இந்த சின்னப்புறாவை தினம் தினம் சமைப்பவன்.
சந்தேக அம்புகளால் என் தேகத்தை துளைப்பவன் .

தோழா ஒன்று தெரியுமா நான் இறந்தால் எனக்கு கண்டிப்பாய் சொர்க்கம்தான். இந்த மண்ணுலகில் நரகத்தில் வாழ்கிறேனே! இல்லை இல்லை நரகத்தோடு வாழ்கிறேனே...

சரி என் சோகம் முழுவதும் சொன்னால் நீ கண்ணீரில் கரைந்துவிடுவாய்..

நேற்று ஒரு கவிதை எழுதினேன்...

தனியாய் இருந்தேன்
துணையாய்
தனிமை"

எப்படி இருக்கிறது நண்பா?

ஒரு நல்ல செய்தி சொல்ல மறந்து விட்டேனே !
அந்த புருஷப்பேய்க்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது ! அதுவும் எப்படி ? எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால்

அந்த வேதாளம் வேறொரு பெண்மரம் தேடி போய்விட்டது. போனமாதம்தான் நாங்கள் நிரந்தரமாக பிரிந்தோம் நண்பா ..

சரி இனியாவது வாழ்க்கையின் அழகை ரசிக்கலாம் என்று நினைத்தேன்....
ஆனால் இந்த முட்டாள் சமுதாயம் எனக்கு எத்தனை பெயர் தருகிறது பார் தோழனே !

1. என் வீட்டில் என் பெயர் வாழாவெட்டி(ஆனாலும் என் சம்பளம் இனி
முழுவதுமாக கொடுக்க வேண்டுமாம் !!)
2. தெருவோர டீக்கடை ரோமியோக்கள் வைத்திருக்கும் பெயர் தனிக்கட்டை!( கட்டைல போயிருவீங்கடான்னு திட்ட நினைத்தேன். வார்த்தைகளை செலவிட விரும்பாமல் திரும்பிவிட்டேன்)
3.குழாயடிப் பெண்களிடம் என் பெயர் " பொழைக்க தெரியாதவ " (அதனால்தான் நான் சம்பாதிக்கிறேன் .. இதுகள் மெகா சீரியலில் மூழ்கி கிடக்கறதுகள்!)

ம்ம் .....இப்படி நிறைய...என் அலுவலகத்தில் ஒரு பெயர் ...தோழிகளிடத்தில் ஒரு பெயர் ....

சரி அதுகிடக்கட்டும் .... இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன் ஒரு ரோஜா செடி வளர்க்கிறேன் .. என் அறை ஜன்னலோரம் அந்த ரோஜா தொட்டி இருக்கிறது ...

அது நேற்று ஒரு சின்ன மொட்டு விட்டிருந்தது...
எவ்வளவு அழகா இருந்துச்சு தெரியுமா ? அப்படியே அள்ளிக்கலாம்
போல இருந்துச்சு டா..

ஆனா இன்னைக்கு காலைல பூவா மாறாம அப்படியே உதிர்ந்து போச்சுது....

சே... அந்த மொட்டுக்கு எவ்ளோ ஆசையா இருந்திருக்கும் இந்த உலகத்தை பார்க்க.... பாவம் அது கொடுத்து வச்சது அவ்வளவுதான் ..

சரி ரொம்ப நேரமாச்சு அடுத்த மடல்ல நாம நிறைய பேசுவோம் சரியா?

நீ ஒழுங்கா சாப்பிடுடா....

என்றும் உன் தோள்தேடும்
உன் ப்ரிய தோழி .

கடிதம் எழுதி முடித்தாள் அவள்.

எழுதிய கடிதத்தை மறுநாள் அருகிலிருக்கும் கோவிலில் சென்று வைத்து விட்டு திரும்பினாள்
அவள். அவள் எழுதிய கடிதம் கடவுளுக்கு ....

ஆம் ...அவளுக்கு தோழன் என்றால் அது
கடவுள் மட்டுமே !

இவள் போல் மனசிற்குள் ஆயிரம் ஆசைப்பூக்களிருந்தும் இந்த சமுதாயத்தில் காகித பூக்களாய் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள் எத்தனை எத்தனையோ….

இது ஒரு பெண்ணை அடிப்படையாய் வைத்து எழுதப்பட்டாலும்

இந்தக் கடிதத்தில் வருகின்ற "சந்தேக கணவன்" (கள்) இலட்சத்தில் ஒருவராவது இதைப் படித்து
திருந்தினால்

காகிதப்பூக்களும் இனி மணம் வீசும்!

நம்பிக்கையுடன ,
நிலாரசிகன்

Tuesday, March 07, 2006

கூர் தீட்டிய அம்புகள்

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் அரங்கர் இட்ட கவிதைகள்

கூர் தீட்டிய அம்புகள்
தயாராக இருந்தன.
மேலும் மேலும்
கூர்தீட்டியபடியே
தருணம் பார்த்திருந்தேன்.

தருணம் வரவில்லை.

அம்புகள் துருப்பிடித்தன..
மழுங்கிப் போயின.

மீண்டும் மீண்டும்

கூர்தீட்டியபடியே...

என் ஆயுள்
முடிந்துபோனது.

மரம்
--------
மண்ணின் வளமதனால்
மண்ணின் தன்மையதே ஆகி,

மண்ணின் சாறுண்டு,
தண்ணென,
தானும் அ·தே கொண்டு,

கிடந்தபூமி கிளர்ந்தெழுந்து
நின்றார்போல்,

நிமிர்ந்தெழுந்து நெடிதுயர்ந்து
நின்று,

புழுபூச்சி முதல்
வல்லூறு ஈறாகப்,

பல்லுயிர்களும் வாழும்
பெருநிலமாய்,

சிறு குருவிகளின்
குட்டிகளுக்குத் தொட்டிலாய்,

நெருப்பென வாட்டுங்
கோடையிலும்,

தெள்ளிய நீரோடையின்
தன்மையோடு

நிழல்உகுத்து,

நிமிர்ந்து நிற்கும்
நீறூற்றே!

அழிப்பார்வரினும்
அஞ்சாதுநின்று,

அங்குமிங்கும் ஓடாது,

வெட்டிப் பிளக்கும்போதும்
சிறிதும் கண்ணீர் உகுக்காத
மறமே...

Monday, March 06, 2006

38-பரணில் கிடைத்த பனை ஓலை

எனது பரணில் கிடைத்த பனை ஓலையிலிருந்து பெறப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் முத்தமிழ் கூகிள் குழுமத்தின் தந்தையும் ஆசானுமான முனைவர் இரவா கபிலன் அவர்கள்

அமுதே வருக! வருக

இரவா - கபிலன்

தித்திக்கும் ஆரமுதே! 'இந்து' என்னும்

தென்னகத்துத் தாமரையே! தொட்டுப் பார்த்தே

சுற்றுகின்ற பூங்கொடியே! இதயத் துள்ளே

துளிர்கின்ற புன்னகையே! கடைக்கண் காட்டிப்

பற்றிக்கும் பைம்பொழிலே! இளமை துள்ளும்

பஞ்சணையின் பரவசமே! நிலவும் கூசும்

முத்துப்பல் பூச்சரமே! என்றன் நெஞ்சில்

மூழ்கிவிட்ட திருவிளக்கே! அமுதின் தேரே!



எதற்கென்னைத் திருடினாய்? என்னைக் கேட்டால்

இல்லையென்று சொல்வேனா? கொள்ளைக் காரி!

எதற்காகச் சிரிக்கின்றாய்? இரவுக் கனவும்

எரிதணலாய் ஆச்சுதடி! சிறகு கட்டிப்

பறக்கின்ற நினைவுகளும் உன்னைச் சுற்றிப்

பரிவட்டம் கட்டுதடி! பட்டைத் தொட்டும்

உறங்காமல் கிடக்குதடி! ஊமை நெஞ்சும்

உனைத்தேடித் தவிக்குதடி! வருக, மீண்டும்!



மறுபடியும் வருவாயா? மனதுக் குள்ளே

மந்திரமும் தருவாயா? செவிக்குள் இன்பம்

நடுவதற்கு வருவாயா? இதயத் துள்ளே

நடைபோட்டு மகிழ்வாயா? தங்கத் தொட்டில்

அசைவதுபோல் வருவாயா? அன்பில் பொங்கும்

அருவிபோல் வருவாயா? உயிர்க்கு வேண்டும்

அமுதத்தைத் தருவாயா? மதுவின் தேரல்

அடையாக வருவாயா? அழகே, சொல்! சொல்!



சித்திரமே நீ, எனக்கு! அமுதின் ஊற்றாம்

செங்கனிதான் நீ, எனக்கு! நீயும் நானும்

பத்திரமாய் இரவுக்லுள் பதுங்கிக் கொள்வோம்!

பசுங்குளிர்தான், என்னுயிர்க்கு! நெஞ்சம் பூக்க

நித்தமொரு கவிபடைப்பேன்! இன்ப வெள்ளம்

நிறைந்திடவே அணையெடுப்பேன்! தமிழைப் போன்ற

புத்தகமாய் உனைப்படிப்பேன்! பட்டு மெத்தைப்

பனிக்கடலில் மிதந்திருப்பேன்! வருக, அன்பே!



காலத்தை வென்றிடலாம்! இதயம் மூட்டும்

கனலுக்குள் வெந்திடலாம்! காத லாலே

ஞாலத்தை அளந்திடலாம்! கனவித் தேரில்

நாமிருவர் பறந்திடலாம்! இனிமை வெள்ள

அலைநடுவே மிதந்திடலாம்! மாறி மாறி

அமுதத்தைப் பகிந்திடலாம்! நமக்குள் நாமே

சோதிக்கக் கிடந்திடலாம்! உயிரை மாற்றி

ஆதிக்கம் செய்திடலாம்! அமுதே வா! வா!



சாய்ந்தாலும் கோபுரந்தான்! கொங்கை முற்றிச்

சரிந்தாலும் மாமலைதான்! காதற் கண்கள்

காய்ந்தாலும் செம்மலர்தான்! இதழின் தேரல்

கரித்தாலும் செங்கனிதான்! மலரின் கைகள்

ஆய்ந்தாலும் அணிகலந்தான்! பட்டு மேனி

அசைந்தாடும் பூங்கொடிதான்! தென்றல் போலப்

பாய்ந்தாலும் மானினந்தான்! தமிழால் கொஞ்சிப்

பசியாற்றும் பைந்தமிழே, இந்து, நீ, வா!



நெஞ்சுக்குள் இடங்கொடு! கவிஞன் என்றன்

நெஞ்சுக்கும் நிலைத்திடு! அன்பில் பூக்கும்

மஞ்சத்தில் மகிழ்ந்திடு! மனித வாழ்வை

மதித்துமே இணைந்திடு! இதயந் தேடும்

அஞ்சுகமாய் இருந்திடு! இன்னும் என்றும்

அருகினிலே அமர்ந்திடு! உயிரே என்னில்

தஞ்சமாய் வந்திடு! தமிழைப் போலத்

தளிர்த்து நீ, வாழ்ந்திடு! வாழி, இந்து!



இனிக்கின்ற நிலவாக இருப்ப தென்றால்

என்னுடனே இருந்து போ! இல்லை யென்றால்,

பனி போலே எனைவிட்டுத் தேய்வ தென்றால்

பாசத்தைக் காதலை நீ அறிவ தென்றோ?

இனிக்கின்ற காதல்தான் வரலா றாகும்!

இகழ்கின்ற மற்றெல்லாம் கவிஞர்க் கில்லை!

கனிக்குவியல் தேன் பொழியும் 'இந்து', செந்தேன்

கவிவடிக்கும் மாளிகைக்குள் வாழ்க! நீயே!

37.ஆயிரம் பூவிதழ்கள்

மெழுகு.*


ஆயிரம் பூவிதழ்கள்
அர்ச்சதையாய் என் மீது
வீழ்ந்த போதும்
நான் அசையாமல்
அப்படியே மணமேடையில்
அமர்ந்திருந்தேன்.


ஆனால்


என் அன்பே!
உன் இரண்டே பூ இதழ்கள்
என் மீது பட்டவுடன்
நான் ஏன் மெழுகாகிப் போனேன்???


--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.


பூஜ்யம் என்பது வெறுமையல்ல
அதுதான் வெற்றியின் முதல் படி!. - வெறும்
புள்ளிகள் என்பது முடிவும் அல்ல
அதுதான் தொடக்கத்தின் வாசல் படி!


முதலடி வைக்கப் பயந்துவிட்டால்
இமயம் எப்படி ஏறுவது? - ஒரு
புள்ளியை வைத்துத் தொடங்காவிட்டால்
கோலங்கள் எப்படி போடுவது??


முதலடி வைத்து எழுந்திடு மகனே!
உலகம் உந்தன் காலடியில்! - அந்த
அகரம் எழுதிப் பழகிடு மகனே!
உலக மொழிகள் உந்தன் விரலிடையில்!!


தொடக்கம் இன்றி வெற்றிகள் இல்லை
துணிவுடன் எதையும் தொடங்கிவிடு! - மனத்
திடத்துடன் உளியைக் கையில் எடுத்து
பாறைகளைச் சிலை யாக்கிவிடு!!


வாழ்க்கையைக் கண்டு அஞ்சிவிடாதே
ஒவ்வொரு படியாய் ஏறிவிடு! - அந்த
உயரத்தைக் கண்டு பயந்து விடாதே
பருந்தெனப் பறந்து வானைத் தொடு!!!
--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.

Sunday, March 05, 2006

நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும் - அன்புசெல்வன்

என்னை தமிழினி முத்து 4 விளையாட்டில் இழுத்துவிட்டார்.இழுத்து 1 வாரமாகிறது.தாமதத்துக்கு அவர் மன்னிப்பாராக.சரி இதோ என் நாலு

எனக்கு பிடித்த 4 விஷயங்கள்
1.செஸ் ஆடுவது
2.எழுதுவது
3.படிப்பது
4.சினிமா பார்ப்பது

பிடித்த 4 படங்கள்

1.சிவாஜி காமடி படங்கள்
2.பழைய ரவிச்சந்திரன் படங்கள்
3.விட்டலாச்சார்யா படங்கள்
4.பழைய ரஜினி சண்டை படங்கள்

பிடித்த 4 ஊர்கள்
1.காரைக்குடி
2.ராமநாதபுரம்
3.பொள்ளாச்சி
4.கிணத்துக்கடவு

பிடித்த நடிகர்கள் காம்பினேஷன்

1.கவுண்டமணி,செந்தில்
2.ரவிச்சந்திரன்,நாகேஷ்
3.ரஜினிகாந்த், YG மகேந்ரன்
4.சத்யராஜ்,கவுண்டர்,வடிவேலு

பிடித்த 4 உணவகங்கள்
1.பாலாஜி மெஸ்- கிணத்துக்கடவு: அருமையான வீட்டு சாப்பாடு கிடைக்கும்.தலைவாழை இலை போட்டு சூடாக சமையல் செய்து மிகவும் நல்ல காய்கறிகளை வைத்து சமையல் செய்து பரிமாறுவார்கள்.50 பேருக்கு அளவாக தான் சமைப்பார்கள்.அதற்கு மேல் வந்தால் நோ..நோ தான்.

2.அன்னபூர்ணா கவுரிசங்கர் கோவை:கோவையில் இருந்தவர்களுக்கு அன்னபூர்ணாவில் கிடைத்த திருப்தி பைவ்ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டாலும் கிடைக்காது.அங்கு கிடைத்த சாம்பார் இட்லியும்,கள்ளிச்சொட்டு காப்பியும்,மசால் தோசையும் இன்னும் மனதில் நிற்கிறது.

3.பி.எஸ்.ஜி கல்லூரி கேன்டீன்,கோவை:கிட்டத்தட்ட ஒரு ஓட்டல் போலவே சுவையும் தரமும் இருக்கும்.விலை மிக குறைவு.அசத்தலான வெரைட்டியில் தோசைகள்,பிரியாணி என கிடைக்கும்.

4.முருகன் இட்லி கடை,மதுரை:பெயர் தான் இட்லிகடை.ஆனால் எல்லா வகை சைவ உணவுகளும் கிடைக்கும்.மதுரை போனால் இங்கு போகாமல் திரும்புவதில்லை.இந்த கடை இருக்கும் தெருவில் முந்திரிபருப்பு ஜூஸ்,பாதாம் ஜூஸ் என விற்பார்கள்.இதிலெல்லாம் ஜூஸ் போட முடியுமா என அதிசயம் வந்து குடித்து பார்த்து அந்த சுவையும் பிடித்து போய் விட்டது.
மதுரைக்கு போனால் ஜிகர்தண்டா என ஒன்று கிடைக்கும் என்றார்கள்.ஆனால் ஒருமுறை கூட அதை குடித்ததில்லை என்ற வருத்தம் இன்னும் மனதுக்குள் இருக்கிறது.

மிகவும் பிடித்த கோயில்கள்

1.பாலமலை ரங்கநாதர் கோயில்,கோவை

இந்த கோயில் மேல் ஏறுவதே பெரிய சாதனை.மலை மேல் ஏற 4 மணி நேரமாகும்.சுற்றுலா போவது போல் வீட்டில் அனைவரும் போவோம்.அந்த நாட்களை எல்லாம் மறக்கவே முடியாது.

2.திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்: திருமணமாகி மனைவியும் நானும் போன முதல் கோயில்.திருப்பாவை பாடிய அந்த பெண்தெய்வம் நடந்த தெருவில்,அவள் மலர் பறித்த பூங்காவில் நடந்த அனுபவத்தை வாய் விட்டு சொல்ல முடியாது.

3.நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில்: கம்பீரமாக ஆஞ்சநேயர் நிற்கும் அந்த அழகை காண கண் கோடி போதாது.என் அம்மாவும் நானும் இருமுறை போயிருக்கிறோம்.

4.பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோயில் புதிதாக கட்டிய கோயில்.மிகவும் நல்ல முறையில் வைத்திருப்பதுடன்,ஆஞ்சநேயர் பற்றி குட்டிகதைகள் எல்லாம் சொல்லுவார்கள்.

எந்த 4 வலைபதிவர்களை இழுக்கலாம் என யோசித்து பார்த்ததில் கிட்டத்தட்ட எல்லாரும் இழுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது. ஆக என் நண்பர்களில் இழுக்கப்படாமல் மீதமிருக்கும் நால்வரில் நான் இழுக்க விரும்பும் 4 வலைபதிவர்கள்

1.அன்பை அள்ளித்தரும் எனது இனிய சாம்
2.நெஞ்சம் நிறைந்த நட்பில் கிடைத்த என் அன்பு முபாரக்
3.எனது முத்தமிழ் குடும்பம்.
4. என் இனிய சொந்தம் சிவசங்கர்

கதையைக் குறை

முத்தமிழின் வளவினுள் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
"ஏதும் நடக்கலாம் என்பதை இந்திய தேர்வுக்கூட்டணிகள் உங்களுக்கு காட்டியிருக்கலாம்"....'அடச்சே" என்றெல்லாம் அலுத்துக்கொள்ளாதீர்கள். 'ஏனெனில் நாளாந்தம் நடக்கின்ற வேடிக்கை விளளயாட்டுக்கள்
தானே இவை.

முத்தமிழின் மெருகேற்றம் கண்டு மனம் பூரிப்பில் திளைக்கின்றது.
நினைவு நல்லது வேண்டும்என்பதற்கிணங்க நம் நினைவுகள் நல்லவையாக
இருந்துவிட்டால் 'நெருங்கிய பொருள் கைப்படும் என அறிந்தோம்.

அத்தோடு ஒரு கொக்கியோடு நிறுத்தினேன் அல்லவா? உங்கள் வாய்திறந்து நீங்கள்எப்போது பேசுவீர்களளென்ற ஆவலைத்தூண்டி விட்டு உங்கள் பேச்சின் ஆழம் உண்மை தெளிவு, ஞானம் இவை கலந்து ஒரு நல்ல பேச்சாக இருக்க வேண்டும்.

"சில பேரோடு கதைத்துக்கொண்டிரு்ந்தாலோ பொழுது போய்விடும். இன்னும்
சிலரோடு கதைத்துக்கொண்டிருந்தாலோ உற்சாகம் பீறிடும். இன்னும் சிலரோடு கதைத்துக்கொண்டிருந்தாலோ ஆயுள் அவதிப்படும்"...

இந்த மூன்று வகையானவர்கள் இருக்கின்றார்கள். இதில் நீங்கள் எந்த வகை?
அந்த முதல்இரண்டு வகையில் முதல்வகை நம் நேரத்தை சந்தோசமாக்குவார்கள். இரண்டாவது வகை நம் நேரத்தைப்பொன்னாக்குபவர்கள் மூன்றாவது வகையினர் நம் நேரத்தை கரியாக்குபவர்கள். ஆக இந்த மூன்றாவது வகையினரிடம் இருந்து எப்படி எம் நேரத்தை பாதுகாத்துக்கொள்வது?

முதலில் அவர்கள் பேச்சு எப்படித்தொடங்கும் என்பதை கண்டு கொண்டிருப்பீர்கள் இருந்தாலும் என் அனுபவத்தில் '.....அவங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது என்பது மாதிரித்தான் தொடங்குவார்கள். சுயபுராணம் பாடுவதில்
பலே கெட்டிக்காரர்கள்..அப்பப்பப்போ உங்களுக்கு அவர்கள் பேச்சு அலுப்படையாமல் இருக்கின்றதா என்று பார்க்க இடைக்கிடை...'உங்களைப்பற்றியும்இரண்டு மூன்று'ஐஸ் மழை பொழிவார்கள்கள்அதை நீங்களே அவதானித்துக்கொள்ளலாம்,ஏனெனில் அது பொய் யான வார்த்தை என்பதுபோக போக அல்ல உடனேயே உங்களால் புரிந்து கொள்ள முடியும். அடிக்கடி உங்களைத்தேவையே இன்றி புகழ்ந்து தள்ளுவார்கள். அது வெறும் புழுகு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களிடம் இருந்து எப்படித்தப்பித்துக்கொள்ளலாம்.'இருங்க எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு இன்னொரு நாள் சாவகாசமா கதைபோமே!!" என்கின்ற ரீதியில் அவர்கள் மனம் புண்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.

'கம்பராமாயணம் தந்த சொல்லின் செல்வர்'எங்கள் ஆஞ்சநேயப்பெருமான் எப்படி அந்த பெயரைத்தட்டிக்கொண்டார். தெரியுமா?தேவையற்ற பேச்சுக்கள் அவர் வாயில் இருந்து எப்போதுமே வந்ததில்லை " கண்டேன் சீதையை' .. இதுதான் அவர் இராவணன் பிடியிலிருந்தசீதையைக்கண்டு இராமருகுச்சொல்லிய முதல் வார்த்தை! ஆக அந்த இரண்டே சொற்களில்வீண் வர்ணனைகள் இல்லை வாய்சவடால் இல்லை. அறிந்து தெளிந்து நேரத்திற்கு ஏற்ற வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். கதையைக் குறைப்பவனுக்கு ஆயுளூம் அதிகம் என்று ஆய்வுகளும் சொல்லி இருக்கின்றன.

நீங்களூம் சொல்லின் செல்வர் ஆக வேண்டாமா?!! அடுத்த முத்தமிழின் வளவினுள் உங்களைச் சந்திக்கும் வரை


'இன்பத்தை கருவாக்கினாள் பெண்'
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்"
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற
செல்வம் பெண்' விலையற்ற செல்வம் பெண்"....

மார்ச் 8ம் நாள் சர்வதேச மகளிர் தினம்'.. எல்லோருக்கும் பாதுகாப்பான நல் மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்களிடம் இருந்து...


--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4