Saturday, April 01, 2006

இந்திய நாய்களும் அமெரிக்க நாய்களும் - அன்பு செல்வன்







என் நெருங்கிய நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன்.முதல் முதலில் அவன் வீட்டுக்கு போனபோது பயந்துவிட்டேன்.மிகப்பெரும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை வளர்த்துவந்தான்.பில் என்று நாய்க்கு பெயர்.இங்கே நாய்களுக்கு அனாதை விடுதி ஒன்று உள்ளது.அங்கிருந்து எடுத்து வந்து வளர்க்கிறானாம்.

இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டருகே தெரு நாய் ஒன்று குட்டி போட்டிருந்தது.அதில் அழகான குட்டி ஒன்றை தூக்கிகொண்டு வந்து ஆசையாய் டோரி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தோம்.

பில் மிகவும் சூட்டிகையான நாய்.அதை வீட்டுக்குளேயே வளர்க்கிறார்கள்.சோபாவில் ஏறி உட்காரும், பெட்டில் ஏறி படுக்கும்.ஒண்ணுக்கு,ரெண்டுக்கு வீட்டுக்குள் போவதில்லை.ஒண்ணுக்கு வந்தால் வீட்டுக்கு வெளியே ஓடி அதற்கென தனி டாய்லட் கட்டியிருக்கிறார்கள்.அங்கே தான் போகும்."எப்படி பழக்கினாய்" என என் நண்பனிடம் கேட்டேன்.2000$ செலவில் நாய் ட்ரெய்னரை வீட்டுக்கு கூட்டி வந்து பழக்கினானாம்.

டோரி வந்த புதிதில் வீட்டுக்குளே ஒளித்து வைத்து வளர்த்தோம்.எங்கள் பாட்டிக்கும்,அப்பாவுக்கும் தெரிந்தால் திட்டுவார்கள் என பயம்.டோரி கொஞ்சம் பெரிதானதும் குட்டு உடைந்து திட்டு வாங்கினோம்.அதன் பின்னும் வீட்டுக்குள்ளேயே வளர்த்தோம்.ஆனால் சில நாட்கள் கழித்து மூச்சா,பீச்சா எல்லாம் வீட்டுக்குளேயே போக ஆரம்பித்தது.கன்னா பின்னவென்று திட்டு கிடைத்ததும் அதை வெளியே தோட்டத்துகுள்ளேயே வளர்த்தோம்.அதன் பின் டோரி வெளியே தான் இருந்தது.

விருந்தாளிகள் வந்தால் பில் அவர்கள் மீது பாய்வதில்லை.நேராக ஓடிப் போய் சோபாவின் மீது ஏறி நின்று கொள்ளும்.விருந்தாளிகள் அதை தடவி கொடுக்க வேண்டும்.அதன் பின் அது நண்பனாகிவிடும்.

விருந்தாளிகள் வந்தால் டோரியை கட்டித்தான் வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் பாய்ந்து விடும்.இதற்கு பயந்தே விருந்தாளிகள் வந்தால் டோரியை வெளியே அனுப்பிவிடுவோம்.கதவை திறந்து விட்டால் அது ஓடிப்போய் விடும்.

பில் சாப்பிட மாட்டுக்கறியும்,சிக்கனும் பெட்கோவில்.பில்லுக்கு சீஸ் மிகவும் பிடிக்கும்.ஐஸ் கியூப்ஸ் என்றால் அதற்கு உயிர்.நாய்க்கு தனியாக இங்கு உண்டு.அதை அடிக்கடி வாங்கி கொடுப்பான் என் நண்பன்.அதற்கு விளையாட நாய் பொம்மைகள் கூட நிறைய வாங்கி வைத்திருந்தான்.அது தூங்க தனி பெட்.டீவி பார்க்கும்போது ஓடி வந்து மடியில் ஏறி படுத்துக்கொள்ளும்.

நாங்கள் டோரிக்கு போட்டது சாதம் தான்.எங்கள் வீட்டில் அசைவம் மூச்ச்.அதனால் டோரியை சைவமாகத் தான் வளர்த்தோம்.நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ அதே சாப்பாடு தான் டோரிக்கும்.அது எங்களுடன் அதற்கு சின்ன வயதாக இருக்கும்போது விளையாடியது.அது வளர்ந்த பின் பகலில் வெளியே ஓடிவிடும்.சாப்பாட்டு வேளைக்கு திரும்ப வந்து சாப்பிட்டு விட்டு பிறகு மீண்டும் ஓடிவிடும்.

இப்படி இரண்டு நாய்களையும் ஒப்பிட்டு பார்த்தபின் எனக்கு "என்னடா நாய் வளர்த்தோம்?" என்று ஆகிவிட்டது."இங்கே நாயை பிள்ளை மாதிரி வளர்க்கிறார்கள்.நாம் நாயை நாய் மாதிரி வளர்த்தோமே" என தோன்றியது.

டோரி செத்தது கூட எங்கள் அலட்சியத்தால் தான்.ஒரு நாள் நாய் வண்டி வந்து அதை பிடித்துக்கொண்டு போய்விட்டது.50 ரூபாய் கொடுத்திருந்தால் விட்டிருப்பார்கள்.எங்கள் பாட்டி நாய்க்கு 50 ரூபாயா என யோசித்து நாய் வண்டிக்காரனிடம் 10 ரூபாய் தருகிறேன் என பேரம் பேச அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான்.சாயந்திரம் வீட்டுக்கு வந்து விஷயம் தெரிந்து கன்னா பின்னாவென்று பாட்டியை திட்டத்தான் முடிந்தது.அதன்பின் இரண்டு மாதம் மிகவும் சோகமாக இருந்தேன்.அதன் பின் நாயே வளர்க்கவில்லை.

பில்லை பார்க்கும்போது இதெல்லாம் நினைவுக்கு வந்தது.நாய் வளர்த்தால் இப்படித்தானே வளர்க்க வேண்டும் என தோன்றியது.அதன் பின் திடிரென்று ஒரு முக்கிய சந்தேகம் தோன்றியது.

டோரி மிகவும் ரொமான்டிக்கான நாய்.அதற்கு எங்கள் தெருவிலிருந்த பெண் நாயுடன் மிக நெருங்கிய லவ்ஸ் உண்டு.அந்த நாயிடம் வேறு எந்த நாயையும் நெருங்க டோரி விடாது.பில் வீட்டுக்குளே இருக்கிறதே...இதற்கு என்ன செய்யும் என தோன்றியது.நண்பனிடம் கேட்டேன்.

அந்த பிரச்சனையே பில்லுக்கு இல்லை என்று சொல்லிவிட்டான்.அது பிறந்து சில நாட்களில் ஆபரேஷன் செய்து அதை நீக்கி விட்டார்களாம்.அதற்கு இனக்கவர்ச்சியே எப்போதும் தோன்றாதாம்.

கேட்டதும் மனசு நொந்து விட்டது....பில்லை பார்த்ததும் அதன் பின் பொறாமை தோன்றவில்லை.டோரியை நாங்கள் வளர்த்தவிதம் ஆயிரம் மடங்கு தேவலை என்று தோன்றியது.நாயை நாய் மாதிரி வளர்த்தோம்.சந்தோஷமாக இருந்து செத்துவிட்டது.இப்படி பில் மாதிரி பொம்மையாக வாழ்ந்து என்ன பயன் என்று தோன்றியது.

அமெரிக்க நாய்களை ஒப்பிடுகையில் இந்திய நாய்கள் கொடுத்து வைத்தவை தான் என தோன்றுகிறது...

Friday, March 31, 2006

கோதையின் சந்தேகம்

கோதையின் சந்தேகம்

மதியம் அமுதுண்டு விட்டு சற்றே ஓய்வுக் கொள்ளும் பொருட்டு சிறிய மணையைத் தலைக்கு வைத்துக் கொண்டுப் படுத்தார், பெரியாழ்வார். அவருக்கு மதியம் தூங்கும் பழக்கம் இல்லை. வெறுமனே படுத்துக் கொண்டால் முதுகு, கை, கால் எல்லாம் சற்று புத்துணர்ச்சி பெறும். மீண்டும் தெம்பாக தம் பணியைத் தொடரலாம். சிறு இலவங்கத்தையும், கல்கண்டையும் வாயில் இட்டு மென்றுக் கொண்டிருந்தார்.

அவருக்கு சற்று அருகில்,முற்றத்திற்கு பக்கத்தில், ஒரு காலை மடக்கி, மறு காலைத் தொங்கவிட்டு, செம்மரத் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த கோதையைக் கண்டார். அவளது கைகள் இரண்டும் இறுக இணைந்திருந்தது. அது மடியில் இருந்தது. அழகிய அமைதியானக் கடலை ஒத்த இரு விசாலமான விழிகள் எங்கோ எதையோ பார்த்துக் கொண்டிருந்தன. அது நிச்சயமாக இவ்வுலகில் இல்லை என்பது மாத்திரம் தீர்மானமாகத் தெரிந்தது. மாதுளம்பழ மணியின் நிறத்தை ஒத்திருந்த இதழ்கள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

பெரியாழ்வார்:என்னம்மா அப்படி ஒரு யோசனை?

ஆண்டாள்:ஒரு சந்தேகம்;தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

பெரியாழ்வார்:என்ன?

ஆண்டாள்: மனிதர்களின் வாயில் வீசும் வாடை, அவர்களது காமத்தால் அறியாது போனாலும், குழந்தைகளும், நல்லோர்களும் அறிவர். ஆனால் என் இதயத்தை நானறியாதப் போதே கவர்ந்த அந்த கள்ளனின் அதரமும், வாயும் எத்தகைய நறுமணம் வீசும் என்று யோசிக்கிறேன்.

மாடுகளுக்கு ஏற்றாற் போல் அதன் பாஷை பேசும் இடையன் மாடுகளின் தோழனாகி அவற்றை வழி நடத்துகிறான். அது போல் மனிதனாகி நம் தோழனாகி வழி நடத்த வந்த அந்த நாரணன் வாயின் கந்தம் அறிய மனம் ஏங்கியது.....(கண்கள் ஆழ்ந்து பல மேலுலகங்களை துளைத்து எதிலேயோ நிலைக்குத்தியது)
பெரியாழ்வார்: (எழுந்து அமர்ந்தவாறே, ஆர்வத்துடன்) ம்...அப்புறம் ...


ஆண்டாள்: அவனது அதரத்தின் சுவையை நன்கறிந்த கோபியரைக் கேட்கலாம் என்றால், பொறாமையினால் சொல்லாமல் போகலாம்.

பெரியாழ்வார்:(இலவங்கத்தையும் மெல்ல மறந்து திறந்த வாயை மூடாமல் இந்த அதர பிரச்சனையில் ஆழ்ந்து விட்டார்)

ஆண்டாள்: லக்ஷ்மியோ திருப்பாத சேவையில் முழுவதுமாய் ஆழ்ந்து விட்டாள்.அதர ருசியை விட அவளுக்குப் பாத ருசி அதிகம்.

பெரியாழ்வார்: சரியாய் சொன்னாய். அதேதான்.

ஆண்டாள்: புல்லாங்குழலைக் கேட்கலாம் என்றால் அது இரு இதழ்களில் ஒரு இதழை மாத்திரமே ருசித்துள்ளது. அது அரைகுறை ஞானம். அது ஆபத்தானது.

பெரியாழ்வார்:(ஆர்வத்துடன்)என்ன ஆபத்து?

ஆண்டாள்:பூரண ஞானம் நல்லது;ஞானமற்றிருந்தாலும் என்றாவது ஞானம் கிடைக்கும்: அரைகுறை ஞானம் வளரவும் வளராது; வளரவும் விடாது. அது ஆபத்தானது இல்லையா?

பெரியாழ்வார்: (ஆமோதித்து தலை அசைக்கிறார்)

ஆண்டாள்:யோசித்து யோசித்துக் கடைசியாக தகுந்த ஒருவரை கண்டுப் பிடித்தேன்.

பெரியாழ்வார்: யார்? யார் அது? (நன்றாக சப்பணமிட்டு அமர்ந்த்துக் கொள்கிறார்)

ஆண்டாள்: அவரது ஸ்பரிசத்தால் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் சங்கு.

பெரியாழ்வார்: பலே

ஆண்டாள்:அதனிடம் கேட்டேன்:
"அவனது திருவாய் கருப்பூரம் போல் நாறுமா? இதழ் தாமரைப் போன்று இருப்பதால் அதன் வாசம் போல் இருக்கிறதா? பவளம் போன்று வழவழப்புடன், ஒளியுடன், நிறத்துடன் இருக்கும் அதரம் எப்படி?தேன் போல, அமுது போல தித்தித்திருக்குமா? பிறைச் சந்திரனைப் போல வளைந்து புன்முறுவலோடு இருக்கும் அந்த வாய் எத்தகு சுவையோடு இருக்கும்? என்ன நறுமணம் வீசும்? நீலக்கடலில் இருந்து,பஞ்சசனனுடலில் கிடந்து, நீலக் கள்வனிடம் போய் சேர்ந்த வெண்ணிற சங்கே சொல்!" (7 ஆம் திருமொழி)
என்றேன்.

பெரியாழ்வார்: பூம் பூம் பூம் என யுத்த களத்தில் எதிரி இதயம் சிதற முழங்கும் அச்சங்கு உன் மெல்லிய உணர்வுகளை அறிந்து பதில் சொல்லுமா என்ன?

ஆண்டாள்: (மருண்ட மானின் கண்களால் தந்தையை நோக்கினாள்)

பெரியாழ்வார்:அவன் வாய் சுவையை,வாசத்தை நான் சொல்கிறேன்:

"அவனது வாய் பால், இனிப்பான தயிர், நல்ல சந்தனம், சண்பகம், கமலம், நல்ல கருப்பூர வாசத்துடன் இருக்கும்."
(பெரியாழ்வார் திருமொழி - 1:6:9)

ஆண்டாள்: ஓ (கண்கள் பாதி மூடிய நிலையில் ஆழ்கிறது)

பெரியாழ்வார்: அவனுடன் அவ்வளவு நெருங்கி பழகி, அவன் வாய் சுவையை அறியாமலா இருக்கிறாய்?

ஆண்டாள்:(நாணம் மேலிட) இல்லை அப்பா! அவனை நெருங்கும் போது, அவன் பாதத்தைக் காணும் வரைதான் என் நிலையில் உள்ளேன். அவன் பாதத்தைக் கண்ட பின் கண்கள் அதை விட்டு அகல மறுக்கின்றன. இதர புலன்களும் செயல்படுவதில்லை. நான் எங்ஙனம் அதர சுவையை அறிவேன்?

பெரியாழ்வார்:(அதிர்ந்தவராய்)அதர சுவை அறிந்தேன்; மதுர சுவை...........????

ஆண்டாளின் இரு விழிகளும் மூடி இருந்தன.

சிறு சாரலோடு கைகோத்த காற்று சிறு குழந்தைப் போல் கல கலவென்று முற்றத்தின் வழியே ஒடி வந்து ஆண்டாளையும்,ஆழ்வாரையும் சுற்றி வந்து ஆடியது.

காழியூரன்

பதிலை சொல் கோதை

ஒரு சிறிய உரையாடலை முதலில் எழுதுகிறேன். அது சிறுக சிறுக ஆண்டாளை நாம் நெருங்க வைக்கும்.

(காழியூரன்)

பெரியாழ்வார்: கோதை! எவ்வளவு அழகாய் பாடுகிறாய்? உருவிலும், சொல்லிலும், எண்ணத்திலும் உன் அழகு சொல்லொண்ணா வண்ணம் உள்ளது. உன்னை இன்னும் நான் சிறு பெண்ணாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.ஆனால் உன் திருமணத்தைப் பற்றி பிறர் கேட்கும் போது தான் நீ வளர்ந்து விட்டாய் என்பதே உறைத்தது.

ஆண்டால்:(மெலிதாய் புன்னகைக்கிறாள். விரல்கள் உதிரிப் பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறது)

பெரியாழ்வார்: (மலர்ந்த முகத்துடன்) சொல். உன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிராய்?

ஆண்டாள்: (நாணம் முகத்தில் பரவ) உங்களுக்குத் தெரியாததா?

பெரியாழ்வார்: (புன்னகையோடு) சிவந்த முகம் நாணத்தால் மேலும் சிவந்தால் அந்த நாரணன் மாத்திரமே அறிவான். சரி கேட்டதற்கு நேரடியான பதிலை சொல் கோதை!

ஆண்டாள்: (மெல்லிய குரலில்) என்னுடையவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட யார் என்றே சொல்லி விடட்டுமா அப்பா?

பெரியாழ்வார்: (வியப்பும் மகிழ்வும் மின்ன) சொல்.

ஆண்டாள்: நாராயணன்; (அவளது கை இறைவனின் விக்ரஹத்தை காண்பிக்கிறது)

பெரியாழ்வார்: (அதிர்ச்சித் தோன்ற) எப்படி சாத்தியம்?

ஆண்டாள்: வேறு யார் சாத்தியம் அப்பா?

பெரியாழ்வார்: (குழப்பமாய்) வேறு யாரயினும் சொல்; அவன் அருளால் நடத்தி விடலாம்.

ஆண்டாள்: ஒரு பெண்ணிற்கு ஆணைத்தானே மண முடிக்க வேண்டும்?

பெரியாழ்வார்: (ஒன்றும் பேசாமல் பார்கிறார்)

ஆண்டாள்: (தொடர்ந்து) அவனை அன்றி வேறு யாரும் புருஷனாக (ஆண்) முடியுமா? வேதம் அவன் மாத்திரமே புருஷன் என்றல்லவா கூறுகிறது. இருப்பதே ஒரு ஆண் தான் எனும் போது வேறு யாருக்கு என்னை நீங்கள் மணமுடிக்க முடியும்?

பெரியாழ்வார்:(கண்களை துண்டால் துடைத்துக் கொள்கிறார்; ஒன்றும் பேசாமல் தொடுத்த மாலையை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு கிளம்பினார்)

ஆண்டாள் கீழே சிந்திய உதிரி பூக்களை எல்லாம் எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

காழியூரன்

Wednesday, March 29, 2006

சின்னஞ்சிறு கிளியே! (உரை சித்திரம்) - என். அமுதன்

செங்கண் மால் வண்ணத்தில் நிலம். சிறு குன்றுகளும், நீரோடைகளும் பாயும் பிரதேசம். அங்கங்கே கரையான்கள் புத்து கட்டி பாம்புகளுக்கு வாடகை விட்ட புத்தூர் கிராமம். விஷ்ணு சித்தர் என்ற அந்தணர் தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொண்டு இருக்கிறார். துளசிச் செடிகள் சீராய் வளர்ந்து நிற்கின்றன.பவள மல்லியும், முல்லையும் கொட்டிச் சிதறி நந்தவனத்தை சுகந்தமாக்கி நிற்கின்றன. துளசி பறிக்க பாத்தி விட்டு பாத்தி தாண்டும் போது விஷ்ணு சித்தர் கண்களில் செளந்தர்யமான குழுந்தையொன்று கண்ணில் படுகிறது. நில மகள் அவதாரம் போல் அது சிரித்துக் கொண்டு மண்ணில் கிடக்கிறது. கரு,கரு வென்று கூந்தல். சுருள், சுருளாக முடி. சின்னஞ்சிறு கிளியே என் கண்ணம்மா என்று கையில் எடுத்துஉச்சி முகர்ந்து, என் "கோதைக் கண்ணே" என்கிறார் பட்டர். தமிழுலகிற்கு கோதை நாச்சியார்அறிமுகமாகிறார்.

கணணன் கதை சொல்லி வளர்க்கிறார் பட்டர் குழந்தையை. அதற்கும் அந்தக் கதைகள்தான் பிடிக்கிறது இயல்பாய். அமுது ஊட்டும் போதும் அதைத் திருக் கண்ண அமுது என்றுதான் படைக்கிறார். கிருஷ்ண ஸ்மரனை இல்லம் நிறைந்து இருக்க தளர்நடை பயின்று, பாவாடைப் பெண் ஆகிறாள் கோதை.

கிராமத்து சிறுமியருடன் சின்னதாக மண் வீடு கட்டி விளையாடிக் களைத்து திண்ணையில் பூக்கட்டிக்கொண்டு இருக்கும் பட்டர் மடியில் தூங்கி விடுகிறாள் கோதை. கனவில் கண்ணன் வந்து அவள் கட்டிய சிற்றில்லத்தை கலைக்கிறான். "வேண்டாம் வேண்டாமென" கத்துகிறாள் கோதை. கண்ணன் கலைத்து நின்று சிரிக்கிறான். தோழிகள் சூழ கண்ணனை வளைத்து விடுகின்றனர் சிறுமியர். "கலைத்த வீட்டைக் கட்டித்தாடா!" என்கின்றனர் சிறுமியர். கலைக்கத் தெரிந்த கண்ணனுக்கு கட்டத் தெரியவில்லை. ஏழுலகம் உண்டு உமிழ்ந்தவனுக்கு மண்ணில் வீடு கட்டத் தெரியவில்லை. கை கொட்டிச் சிரிக்கின்றனர் பெண்கள். இங்கும்அங்கும் ஓடி களைத்து இவர்கள் கையில் சிறையாகிறான் பரந்தாமன். "மாட்டிக் கொண்டாயா" எனச்சிரிக்கின்றாள் கோதை. பட்டர் மடியில் உதிர்ந்த சிரிப்பு பட்டரையும் ஆட் கொள்கிறது. "கண்ணன் விளையாடுகிறான் பார்!" என இவரும் சிரிக்கிறார். குழந்தை கனவு கலைகிறது. "அப்பா, கண்ணன் எங்கே அப்பா?" என வினவுகிறாள். கண்ணன் வந்தானா அம்மா? என்ன செய்தான்? என இவர் கேட்ட இவள் அவருக்கு கண்ணன் கதை சொல்கிறாள். இப்படி கண்ணன் கதையே இவர்களுக்கு வாழ்வாகிப் போகிறது.

பாவாடை, தாவணியில் மிளிர்கிறாள் கோதை இப்போது. அப்பாவிடம் மறக்காமல் கேட்பாள் இன்றும், கனவில் வரும் கண்ணன் நினவிலும் வருவானா என்று. பட்டர் சொல்லுவார், "கோதை, இப்படித்தான் கண்ணன் என் கனவிலுன் ஒருநாள் வந்தான். பாண்டியன் சபையில் போய் பரதத்துவத்தை நிறுவி வா! என்றான். பூகட்டும் என்னை மற்றவர் வாய் கட்டச் செய்தான். பொற்கிழி வளைந்து என் கையில் விழுந்த போதுஎல்லோருக்கும் எதிரில் என் வாக்கை நிலை நாட்ட பரந்தாமனாக வந்து நின்றான். மற்றவர் கண்பட்டுவிடாதோ?".

"அதனால்தான், நீ உடனே பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருகாப்பு, என்று காப்பிட்டாய், இல்லையா அப்பா? என்றாள் கோதை. அமாம், கண்ணே! பிள்ளைக் கனி அமுதல்லவோ கண்ணன். நான் காப்பிடாமல் யார் காப்பிட முடியும்" என்கிறார் பட்டர்.

தாயும், தாயும் பேசுவது போல் உள்ளது சில நேரம், பிள்ளையும், பிள்ளையும் பேசுவது போல் உள்ளது சில நேரம். அன்பு தருவதிலே யாருக்கு யார் நிகர் அங்கு?

மார்கழி பிறக்கிறது. மதி நிறைந்த நாளொன்றில் பண்டைய வழக்கமாகிய பாவை நோன்பைத் துவக்குகிறாள் கோதை. பக்கத்து வீட்டுச் சிறுமியரை அழைத்துக் கொண்டு பாவைப் பாடல்களைச் சொல்லிக் கொண்டு தூங்கும் சிறார்களை எழுப்பிக் கொண்டு நெய் உண்ணாமல், பால் உண்ணாமல், இளங்காலையில் நீராடி கோவில் செல்கிறாள் கோதை. அவள் செய்யும் பாவையில் மறக்காமல் இவள்முன்னோர்களான மற்றய ஆழ்வார்களையும் ஒவ்வொருவராய் எழுப்பிச் செல்கிறாள். கண்ணன் வீடு சென்று நந்தகோபனை எழுப்புகிறாள், நப்பின்னையை எழுப்புகிறாள், அண்ணன் பலதேவனை எழுப்புகிறாள். சீரியசிங்கம் விழிப்புற்று எழுந்தாற் போல் கண்ணனும் எழுகின்றான் இவள் பாடல்களால். மார்கழியில் விடிகிறது.

கண்ணன் நினைவால் பசலை கொள்கிறாள் கோதைப் பெண். இவள் நோய் இன்னதென்று யாரும் அறிகிலர். இவள் மன்மதனுக்கு நோன்பு இருக்கிறாள். கரும்பு வில் கொண்டோனை கன்னல் கனி அமுதனைக் கொண்டு வா,என்கிறாள். முறத்தில் அரிசி கொட்டி கண்ணை மூடி கூடல் விளையாடுகின்றனர் இளம் பெண்கள். கண்ணன் கிடைப்பானாகில் கண்ணை மூடி வட்டம் போட்டாலும் வட்டம் சேர வேண்டும். அதுதான் விளையாட்டு. வட்டம்கூடுகிறது. கோதையின் பசலையும் கூடுகிறது.

தெருவோரம் போகும் குறத்தியைக் கூப்பிட்டு குறி சொல்லச் வைக்கின்றனர் பெண்கள். கன்னங்கரிய விழி கொண்ட குறத்தி, குச்சியை வைத்து விட்டு கோதையின் கையைத் தடவுகிறாள். பெண்ணுருக் கொண்டு பேதையின் நெஞ்சை குறி வைக்கும் இவள் உண்மைக் குறத்திதானோ? பொறுமை இழந்த பொழுதில் குறத்திகுறி சொல்கிறாள், "பெரிய இடத்து சம்மந்தம் உண்டு" என்று. சன்மானமாக அரிசியும், நெல்லும் படியளக்கும் போது, குறத்தி அவை வேண்டாம், கோதை உடுத்திக் களைந்த தாவணியே போதும்என்கிறாள். தாவணியை வாங்கி, ஆண் பிள்ளை போல் தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு கிளம்புகிறாள் குறத்தி. "எந்த ஊர் குறத்தி அம்மா?", என வினவிக் கொண்டு பட்டர் வரும் சமயம் அவள் "சோலைமலைக் குறத்தி" என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். சோலைமலை, சோலை மலை என்பது பட்டர் நினைவில் பட்டுத் தெரித்து திருமால் இரும் சோலைதானோ என வினவும் முன் அவள் முக்குதிரும்பி மறைந்து விடுகிறாள்.

கண்ணன் வரும் நாள் நோக்கி காத்து காத்து இளைத்த கோதை, "சரி, இனி அவர் வந்து மாலை போடும்முன், நானே அவருக்கு மாலை போட்டு விடுகிறேன்" என்று சொல்லி அப்பா திருமாலுக்கு கட்டி வைத்த மாலையைச் சூடி அழகு பார்க்கிறாள் கோதை. கைகள் பதற, பட்டர், "கண்ணே, கண்ணனுக்கான மாலையை கன்னிப் பெண் நீ சூடலாமா? என்ன இது அபச்சாரமென" அவசர, அவசரமாக மீண்டுமோர் மாலை கட்ட,பூசைக்கு நேரமாகிவிடுகிறது. கோவில் சென்று அர்ச்சகரிடம் புது மாலையைக் கொடுத்தால்,அர்ச்சகருக்கு அருள் வந்து விடுகிறது. "கோதை சூடிக்கொடுத்த மாலைதான் எமக்கு உவப்பு, கொண்டு வாரும் அந்த மாலையை" என அர்ச்சகர் அருள் வந்து சொல்ல ஓடுகிறார் பட்டர்பிரான் வீடு நோக்கி. அழுதுகொண்டிருக்கும் கோதையை "அன்னாய், ஆண்டாள்!" எனக் கூவுகிறார். "என்ன அப்பா? புது வழக்கமாய்ஆண்டாள் என்கிறீர்கள்?" என வினவும் மகளுக்கு சொல்கிறார், "அவன் ஆண்டவன், அவன் உள்ளம் ஆளும் நீ ஆண்டாள்!" என்று.

அன்று இரவே ஆண்டாளுக்கு தெய்வ சொப்பனம் வருகிறது. வாரணங்களான யானைகள் சூழ, வண்ண நிலவனானகண்ணன் வந்து கை பற்றுவது போல்! அவள் கனவையெல்லாம் ஒன்றுவிடாமல் அப்பாவிடம் சொல்கிறாள்ஆண்டாள். "கனவு! கனவு! கண்ணே...தெய்வக் கனவுகள் பொய்பதில்லை. நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு, அம்மா!" என்கிறார் கண்கள் குளமாக பட்டர்பிரான்.

கனவு நினைவாக அதிக நாள் எடுக்க வில்லை. பரிவாரம் சூழ வந்து சேர்கிறான் ஓர் இளைஞன் ஒருநாள்.ஊரே திமிலோகப் படுகிறது. "என்ன அப்பா, எங்கும் இல்லாத புதுப் பழக்கமாய், பிள்ளை- பெண் வீடு தேடி வந்து பெண் கேட்பது?" என வினவுகிறார் பட்டர் சுவாமிகள். அதற்கு பிள்ளையாண்டான் சொல்கிறான், "சுவாமிகளே வைரம் இருக்கும் இடத்தைத்தேடித்தான் வியாபாரி போவது வழக்கம். வைரம் வியாபாரியை நோக்கிப் போகக் கண்டீரோ" என்று. திகைத்துப் போன பட்டர், "பிள்ளாய்! உன்பெயர் என்ன சொன்னாய்? ஊர் என்ன?" என வினவ. "என் பெயர் ரெங்க மன்னார், ஊர் திருவரங்கம்,உங்களை எனக்கு மிக நன்றாகத் தெரியும். உற்றம், உறவுகள் எப்போதும் உங்களைப் பற்றித்தான் பேச்சு"என்கிறான் முத்தாய்பாய்.

வெகுளியான பட்டர்பிரான் வேறு என்ன செய்வார்? இத்தனை சாமர்த்தியமாக பேசும் பிள்ளையிடம்!அடுத்த நாளே கல்யாணம் நடக்கிறது. ஆண்டாளுக்கு இச்சம்மந்தத்தில் கன குஷி!

கல்யாணம் முடிந்து பிள்ளை வீட்டார் ஸ்ரீரங்கம் திரும்புகின்றனர். பட்டர்பிரானும் மாப்பிள்ளை ஊர் வரைவந்து போகிறார்.

ஸ்ரீரெங்கப் பெருமாளை தரிசித்து விட்டு வீடு போகலாம் என பிள்ளை சொல்லி விட்டு, பெரிய்ய்ய்யகோவிலான திரு அரங்கத்தின் வீதி தாண்டி, வீதி தாண்டி, பல மண்டபங்கள் தாண்டி கருவரை விரைகிறான். வயதான பட்டர் முடிந்த மட்டும் எட்டி நடை போடுகிறார். இவர் பெரிய பெருமாள் சன்னிதிக்கு வருவதற்கும், மாப்பிள்ளைப் பையன் நாகப்பை அணையில் துயில் கொள்ளவும் சரியாக இருக்கிறது. இவர் வளர்த்த சின்னஞ் சிறுங்கிளி, மெல்லப் பாம்பணையில் கால் வைத்து ஏறி, ரெங்கனுடன் சங்கமித்துவிடுகிறாள்.

எங்கும், பல்லாண்டு, பல்லாண்டு என வேத முழக்கம் ஒலிக்கிறது. பட்டர்பிரான் கண்கள் குளமாக கை கூப்பி நிற்கிறார்.
பிற்சேர்க்கை: என்னுள்ளும், உன்னுள்ளும் மறைந்திருந்து ஒவ்வொரு நொடியும் இவ்வுலகை சிருஷ்ட்டிக்கும் அக்குழந்தைக்கு இக்கதை நண்பனே/நண்பியே.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4