Tuesday, May 23, 2006

வானமே கூரை-விழியன்

"எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்" என்கின்ற பாணியில் ஊரை சுற்றி வருவார்கள் என்றே மனநலம் குன்றியவர்களை நமக்கு முன்னர் சினிமா காட்டியுள்ளது. இந்திரன் அப்படிப்பட்டவன் இல்லை.அமைதியே உருவானவன்.ஏன் இப்படி ஆனான்..யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தான், பேசவே மாட்டான். அவன் பேசிக்கேட்டவர்கள் மிக அபூர்வம். மனதிற்கு மதம் பிடித்த பின்னர் அவனுக்கு எம்மதமும் சம்மதமாகியது.

மாதா கோவிலில் மணியடித்தால் இவன் செயலாக இருக்கும். பெருமாள் கோவில் மணியடித்தாலும் இவனாக தான் இருக்கும். காலையில் அர்ச்சகர் வீட்டிற்கு போய் நிற்பான் அவர்கள் அங்கு கொடுப்பதை சாப்பிடுவான்.. மதியம் பாதிரியார் அவனுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வைப்பார். தூக்கம் வந்தால் எந்த இடமென்று பாராமல் அங்கேயே படுத்து தூங்கிவிடுவான். அவனுக்கு வானமே கூரை. உடைகளை பார்த்து இவன் மனநலம் குன்றியவன் என்று யரும் சொல்ல முடியாது.. அவ்வளவு சுத்தம். தினமும் துவைத்த துணிகளையே உடுத்துவான். குளக்கரையில் இருக்கும் கிணற்றில் குளித்து முடித்து, அர்ச்சகருக்கு குடம் குடமாக தண்ணீர் எடுத்து தருவான். ஆனால் பிராகாரத்திற்குள் போகமாட்டான். பிரார்த்தனையும் செய்ய மாட்டான். பின்னெ மணி எதற்கு அடிக்கிறான்? அடித்தால் சத்தம் வருமே, அந்த சத்தத்தில் களிப்பான். ஆனந்த கூத்தாடுவான்.சில நாட்களில் அவன் விரக்தியான மனநிலையில் இருப்பான். அழுதுகொண்டே மணி அடிப்பான். வேகமாக அடிப்பான். பார்ப்பவர்களுக்கு பயமாக இருக்கும்.கதறி அழுவான்.மணி அடித்தபடியே அங்கேயே மயக்கமுற்று விழுந்துவிடுவான். அர்ச்சகரோ, பாதிரியாரோ அவன் மீது தண்ணீர் தெளித்து அவனை எழுப்பி உண்பதற்கு ஏதேனும் தருவார்கள்.

ஊர் குழந்தைகளுக்கு இவனை கண்டால் பாதி பயம், பாதி சந்தோசம். இவனுக்கு சலாம் போட்டால் திரும்ப சலாம் போடுவான். "காலை வணக்கம்" என்றால் "காலை வணக்கம்" என்று இருகரம் கூப்பி வணக்கம் சொல்வான். பத்து முறை வணக்கம் சொன்னாலும், எந்த எரிச்சலும் படாமல் மீண்டும் மீண்டும் வணக்கம் தெரிவிப்பான். அதுவும் அவன் நீண்ட தாடியுடன் வணக்கம் சொல்வது ஏதோ ஒரு யோகி வணங்குவது போல் இருக்கும்.பல வருடங்களாக வளரும் தாடி.சாப்பிடும் போது சாப்பாட்டு எச்சங்கள் சில சமயம் ஒட்டிக்கொண்டு அசிங்கமாக காட்சி தரும். அவன் சாப்பிடுவதை பார்க்க அருவருப்பாக இருக்கும். நாகரீகம் இல்லாமல் சாப்பிடுவான். சாம்பார், ரசம், பொரியல், மோர், தயிர் என்று அனைத்தையும் ஒன்றாக குழைத்து சாப்பிடுவான்.

அவன் ஏன் இப்படி ஆனான் என்று யாரும் கேட்டதும் இல்லை. இவனும் கவலைபட்டதில்லை. அவனுக்கு என்ன தெரியும் கவலைகொள்ள? பாதிரியார் சில சமயம் அவனை பற்றி கேட்பார். அர்ச்சகரும் கேட்பார். அவனுக்கு எதுவும் நினைவில் இல்லை, தன் பேர் இந்திரன் என்பது மட்டும் நினைவில் இருந்தது.மற்ற விடயம் ஒன்றும் நினைவில் இல்லை. தான் திருமணம் ஆனவனா? தந்தை தாயார் யார், எந்த ஊர், என்ன படித்தான், நண்பர்கள் எங்கே? ஒரு கேள்விக்கும் விடை கிடைக்கவேயில்லை.

ஒரு நாள் எல்லாவற்றிற்கும் விடைக் கிடைத்தது. அந்த விடை கிடைத்த போது விடை கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுநிசியில் யாரோ எழுப்பக் கண்டான். அவனை சுற்றி பத்து இருபது பேர். அவன் எங்கு தூங்கி கொண்டிருந்தான் என்பது நினைவில் இல்லை. ஊருக்கு வெளியே இருந்த ஆலமரத்தின் அடியில் அனைத்தும் நடந்தது. அத்தனை பேரின் கையிலும் தீப்பந்தமும் வெட்டரிவாளும் இருந்தது.
"உன் பேர் என்ன?". பதறினான்.ஏதும் பேசவில்லை. "கேட்கிறோம் இல்லை. உன் பேர் என்ன? சொல்லுடா". குரல்களில் கலவரம் தெரிந்தது. "அவன் வேட்டியை கழட்டி பாருங்க. அவனை என்ன கேட்பது".

இந்திரனுக்கு லேசாக பழைய நினைவுகள் வந்தது. சில ஆண்டுகள் முன்னர் அவனுடைய குடும்பம், நண்பர்கள் அனைவரும் பக்கத்து ஊரில் நடந்த திருவிழாவிற்கு சென்று இரவு வந்து கொண்டிருந்தனர். இதே போல சுமார் நூறு ஆட்கள் தீப்பந்தமும் கத்தியுடன் இவர்கள் வந்த வண்டியை நோக்கி வந்தனர். இவன் ஓடி மரத்தின் ஓரத்தில் ஒளிந்து கொண்டான். இவன் கண் முன்னே, இவனது குடும்பம், நண்பர்கள் அனைவரும் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்டனர். ஏதோ இனக்கலவரமாம். பழைய நினைவுகள் மீண்டும் வர அதிர்ச்சியுற்று கதறினான்.பதற்றம். அப்பா அம்மா குடும்பம் முழுவது கண் முன்னே பிரிந்ததற்கு இப்போது தான் அழுகின்றான். அழமுடியவில்லை. சக்தி இல்லை. இவன் உடல் முழுவதும் இரத்த காயங்கள். கழுத்து வெட்டுப்பட்டு இருந்தது. உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டிருந்தது. "பாதர் என் ஊரு நினைவிற்கு வந்துவிட்டது, என் அப்பா அம்மா கிட்ட போகிறேன். சாமி என் நண்பர்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பார்க்கபோகிறேன்..." அழுதபடி, குரல் உடைந்து.. அவன் உயிர் பிரிந்தது.

மாதா கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் மணி அடிக்கும் சத்தம் கேட்கின்றது. சில சமயம் வேகமாகவும், சில சமயம் நிதானமாகவும்.காலையில் அர்ச்சகர் வீட்டு நெய் சாதம் திண்கிறான். மதியம் பாதிரியார் பக்கத்தில் உண்கிறான். தூக்கம் என்பதை நினைத்த போது நினைத்த இடத்தில் செய்பவன் ஊரிலேயே இந்திரனுக்கு அடுத்து இவன் ஒருவனாக தான் இருப்பான். வானமே கூரை. இந்திரன் இறக்கும் போது இவன் ஆலமரத்தின் பின்னால் ஒளியாமல் இருந்திருக்கலாம்.வானமே கூரை...

--
விழியன்
http://vizhiyan.wordpress.com

--~--~---------~--~----~------------~-------~--~----~
நம்பிக்கை கொள்!
தயக்கம் தகர் !!
வெற்றி நிச்சயம் !!!
-~----------~----~----~----~------~----~------~--~---

Monday, May 22, 2006

சுதந்திர தீபம்

பாண்டியர் காவியம்

(சுதந்திர தீபம்)


(வெண்பா)

செந்தமிழ் சேர்ந்த மருது வரலாற்றை
சிந்தையால் தேர்ந்தே சிறுவர்க்குப் - பந்தமுடன்
சின்னஞ் சிறுகவிதைக் காவியத்தைச் செய்திட்டேன்!
அன்னை தமிழ்வாழ்க வென்று.



இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்

நல்லற வளர்ச்சிக் காக
நல்கிய பரிசைப் போன்று
சொல்லவே மணங்க ளிக்கும்
சுவைப்பலாக் கனிக ளோடு
மெல்லவே நடந்து வந்தே
மிளிர்கிறாள் பாண்டி நாட்டில். 1.

மலைமகள் உடலைச் சுற்றி
மணிக்கலன் அணிகள் பூட்டிக்
கலைமகள் அழகைப் போல
கரையெள்ம் நகைகள் சேர்த்தே
அலைமகள் வைகைப் பெண்ணின்
அணியெள்ம் செல்வ மெல்லாம்
நிலந்தனில் வந்த போல
நிறைந்தன ஏரிகு ளங்கள். 2.

ஊரார்கள் கூட நின்றே
ஒலித்தனர் வைகை போற்றி
'நூறாறு செல்வம் பெற்றே
நும்மனை செழிக்க' என்றார்!
தீராத ஆசை கொண்ட
தீந்தமிழ்ப் பாவ லர்கள்
'பேறான பேறு வைகைப்
பெண்ணையும் பெற்ற தென்றார்!' 3.

மருமகள் போன்ற வைகை
வருகையைக் கண்ட ஊரார்
'திருமகள் போன்றாள்!' என்றே
தேர்ந்தனர்! ஆடிப் பாடிப்
பெருகவே செல்வ வெள்ளம்
பிறக்கவே வளமும் ஆறாய்!
அருமறை கண்ட வர்கள்
அளித்தனர் வாழ்த்துப் பாக்கள். 4.


புதுமனை புக்ந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல

மதுமலர் வாசத் தோடு
மனைநலம் பெருகிச் செல்ல
முதுமையர் பாண்டி நாட்டார்
முத்தமிழ் வளர்க்க வென்றே
வதுவையாய் வந்த வைகை
வளத்தினால் வளங்கள் வாழும்! 5.


செல்வத்தின் செல்வ மான

சிரஞ்சி வைகைப் பெண்ணாள்
செல்கின்ற விடங்க ளெல்லாம்
சிறப்புடன் செல்வம் பெற்றுச்
செல்வர்கள் வாழும் நாடாய்ச்
சிறுகுடி பெம்ங்குடி யாகச்
சொல்லவே அரிய தான
சுகங்களோ கூடிற் றம்மா! 6.

வளங்களைப் பெற்ற வைகை
மண்டல மக்க ளெல்லாம்
களங்கமே இல்லாக் கல்விக்
கடலினில் ஆடி னார்கள்!
குளங்களும் ஏரி ஆறும்
கூடவே நிலங்க ளெல்லாம்
களங்களை நிறைக்கும் செஞ்நெல்
கதிர்வவூம் மிகுக்க லார்! 7.

அன்புடன்
இரவா

இந்த பதிவில் உள்ள உள்குத்து என்ன?கண்டு பிடியுங்கள்


விருத்தாசலம் : ""தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங் கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்'' என எம்.எல்.ஏ., விஜயகாந்த் கூறினார்.

எம்.எல்.ஏ.,யாக பதவி ஏற்ற பின்னர் விருத்தாசலம் தொகுதிக்கு நேற்று முதல் முறையாக விஜயகாந்த் வந் தார். முதல் விசிட்டிலேயே தொகுதியை கலக்கினார்.

விருத்தாசலத்தில் முதலில் சட்டசபை தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் விஜயகாந்த், கடலுõர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார். அங்கு தலைமை ஆசிரியர் இல்லை. அவர் எங்கு சென்றுள்ளார் என அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். "டி.இ.ஓ., ஆபிசுக்கு சென்றுள்ளார்' என கூறினர். தொடர்ந்து அங்குள்ள ஆசிரியர்களிடம் "எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர். தேவையான கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளதா?' எனக்கேட்டார். அதற்குள் மின்னல் வேகத்தில் வந்த தலைமை ஆசிரியர் ஜவகர், விஜயகாந்திடம் விளக்கினார். தொடர்ந்து அவர் பள்ளியில் கட்டட வசதி குறைவாக உள்ளதால் மாணவர்களுக்கு அசவுகரியமாக உள்ளது எனக்கூறி பாழடைந்த "ப' வடிவ கட்டடத்திற்கு அழைத் துச்சென்றார். அங்கு 13 வகுப் புகள் மிகவும் சிதிலமடைந் துள்ளதை எம்.எல்.ஏ., விஜயகாந்திடம் தலைமை ஆசிரியர் காண்பித்தார். அனைத்து வகுப்பு மற்றும் கட்டடத்தை சுற்றிப்பார்த்த எம்.எல்.ஏ., விஜயகாந்த் இதுகுறித்து நான் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்துப்பேசி புதுப்பிக்க ஏற்பாடு செய்கிறேன். எந்த பிரச்னைகளாக இருந்தாலும் உடனே என்னிடம் தெரிவியுங்கள் எனக் கூறினார்.

அதையடுத்து, ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்ற விஜயகாந்த் அங்குள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து பள்ளிக்கட்டடம் ஏன் பராமரிக்கப்படவில்லை எனக்கேட்டார். அதற்கு அதிகாரிகள் அந்த வகுப்புகளை சீரமைக்க மொத்தம் ரூ.25 லட்சம் தேவைப்படும். அதற் கான எஸ்டிமேட் உடனடியாக தயார் செய்துவிடுகிறோம் என்றனர். உடனே தயார் செய்து நபார்டு வங்கி மூலம் கட்டடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என் றார்.

அடுத்து விஜயகாந்த் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். ஆர்.டி.ஓ., ஜான்லுõயிஸ் விஜயகாந்தை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது, விருத்தாசலம் நகர்மன்றத்தலைவர் டாக்டர் வள்ளுவன் (பா.ம.க.,), விஜயகாந்திடம் நேரில் சென்று வாழ்த்து கூறி நகர வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். மேலும் தொகுதிக் குட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் ஆர்.டி.ஓ., விஜயகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதிகாரிகளோ எம்.எல்.ஏ., என்பதை காட்டிலும் நடிகர் என்பதால் ஒருவித எதிர்பார்ப்போடு விஜயகாந்திடம் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர். இதை தொடர்ந்து எம்.எல்.ஏ., விஜயகாந்த் பேசியதாவது:

எனது முதல் அரசியல் அனுபவம் இதுதான். நான் எம்.எல்.ஏ.,வாக வெற்றிபெற்று இந்த தொகுதிக்கு வந் துள்ளேன். இந்த தொகுதியை சீரமைக்க உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு உரிய மரியாதையை நான் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த மரியாதையில் இம்மியளவும் குறைவு இருக்காது. விஜயகாந்த் என்ற தனிமனிதன் நிறைய உதவிகள் செய்திருந்தாலும். உங்களை போன்ற அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தொகுதி மக்களுக்கு நிறைய பணிகள் செய்ய உள்ளேன். அதற்கு உங்களது பூரண ஒத்துழைப்பு தேவை. இன்னும் ஓரிரு மாதங்களில் விருத்தாசலத் தில் வீடு எடுத்து அடிக்கடி வந்து தங்குவதற்கு முயற்சி செய்வேன். அப்போது நீங்கள் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து என்னிடம் கருத்து தெரிவிக்கலாம் .

இவ்வாறு விஜயகாந்த் பேசினார். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சி பிரமுகர்கள் சென்றனர்.

"ஆண்டுக்கு 2 சினிமாவில் நடிப்பேன்'விருத்தாசலத்தில் விஜயகாந்த், நிருபர் களிடம் கூறியதாவது:

முதலில் இந்த தொகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர், மருத்துவம், மின்வசதி, உயர்கல்வி போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தீர்க்க ஏற்பாடு செய்வேன். நான் தேர்தலின் போது கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமென்றால், நான் ஜெயித் தது மட்டுமல்லாமல் எனது கட்சி வேட் பாளர்களும் ஜெயித்து ஆட்சி அமைத்தால் மட்டுமே முடியும். தற்போது எனது தொகுதிக்குண்டான தேவைகளை மட்டும் அரசிடம் கேட்டும், தேவைப் பட்டால் போராடியும் பெற்றுத் தருவேன்.

எனக்கு ஓட்டு போட்டு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இது மக்களிடம் திராவிடக் கட்சிகளின் மீதுள்ள எதிர்ப்பையே காட்டுகிறது. நான் எனது தொகுதிக்கு குறைந்தது மாதம் இரண்டு முறையாவது வருவேன். தொகுதி பிரச்னை குறித்து அரசிடம் எடுத்துக்கூறுவேன். இப்போதுதான் எம்.எல்.ஏ.,வாகி அரசியலுக்கு வந்துள்ளேன். போகப் போக இன்னும் நேரம் எடுத்துக்கொண்டு தொகுதி மக்களுக்கு எனது கடமையை செய்வேன். நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. தேவைப்பட்டால் தொகுதி மக்களுக்காக ஆளுங்கட்சியாக இருந்தாலும் தயங்காமல் எதிர்க்க தயாராக உள்ளேன்.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பற்றி செயற்குழு, பொதுக்குழு கூடி கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அதற்கு இப் போது அவசரம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருப் பேன். வருடத்திற்கு இரண்டு படங்கள் கண்டிப்பாக கொடுப்பேன். அந்த வருமானத்தை வைத்து இன்னும் தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன். தொகுதி பிரச்னைகள் குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசுவேன். கட்சியை பொறுத்தவரை தேர்தலுக்குப் பிறகு அந்தந்த மாவட்ட பொறுப்பாளர் களை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறேன். கட்சி பிரச்னைகளை பற்றி நிருபர்கள் கேட்டபோது எங்கள் கட்சி பிரச்னை நீங்கள் தோண்டி தோண்டி கேட்காதீர்கள். தேர்தல் நேரத்தில் கட்சிப்பணி செய்யாதவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Sunday, May 21, 2006

பாண்டியர் காவியம்- இரவா

அணிந்துரை
வீரத்தின் விளைநிலம் தமிழகம்! வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல், உயிர்ச் சொல் வீரம். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மருது வரலாறு அதற்குச் சான்று! சிறுவர்தம் சீரிய உள்ளங்களில் சிந்தைகுளிர, வீரம் மிளிரப் பாடி மகிழ்ந்திருக்கிறார் இரவா - கபிலன். சுதந்திர தீபம் இரவா-கபிலனின் கற்பனைத் திறன் பற்றி உலகுக்குணர்த்தும் உயரிய காவியம்.

இக்காவியத்தை ஆழ்ந்து படித்து இன்புற்றேன். கவிஞரின் திறன் கண்டு வியந்தேன்.

வைகை வர்ணனை :- .
வைகைப் பெண்ணைத் தன் சொல்லோவியம் கொண்டு அலங்கரித்து நம் உள்ளங்களைல் உலவ விட்டுள்ளார் கவிஞர்.
"இல்லறம் நோக்கிப் பாயும்
இனியவள் வைகைப் பெண்ணாள்"
என்றும்,
"புதுமனை புகுந்த பெண்ணின்
புதுமணக் கோலம் போல,

வதுவைபோல் வந்த வைகை"
என்றும் சுவையோடும் கற்பனை நயத்தோடும் வர்ணிக்கிறார்.

"செல்வத்தின் செல்வ மான
சிரஞ்சிவி வைகைப் பெண்ணாள்"
என்று கொஞ்சி மகிழ்கிறார்.

வைகை பற்றிக் கவிதை தீட்டும் கவிஞரின் திறன் பாரதிதாசனின் 'அழகின் சிரிப்பு' என்றதோர் சுவையமுதை நினைவூட்டவல்லது.

வீரம் :-
மருது பாண்டியரின் வீர வரலாற்றே இச்சிறு காவியத்தின் உயிர் நாடி. வீரத்தை விளைக்கும் வரிகளே முதலிலிருந்து இறுதிவரை துள்ளி வந்து இதயத்தை அள்ளி விடுகின்றன.
எடுத்துக் காட்டாய் சில வரிகள் இதோ ..... !
"கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொ டாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
..... ..... ....
ஆண்டிகள் போல வந்த
அந்நிய வெள்ளை நீங்கள்
பாண்டியர் எம்மைப் பார்த்துப்
பரம்பரை கேட்கின் றாயா?"

"பாளையக் காரர் தம்மைப்
பரங்கியர் கேலி செய்தால்
கூளங்கள் போலச் செய்வோம்
குருதியில் குளிக்க வைப்போம்!

கோழையின் நெஞ்சிலே வீரமெனும் குருதியோட வைக்கும் கூரிய வரிகள்!
"உய்வதோ கொஞ்ச நாள்தான்
உரிமையும் இழந்து விட்டால்
அய்யமும் கொள்ளு வாரே
அருமையாய் நம்மைப் பெற்றோர்!"
என்று, மருது கூறும் வரிகள், மனோன்மணியத்தில் ஜீவகன் தன் படைகளுக்குக் கூறும் வீரவரிகளுக்கு இணையாக உள்ளன.
வடுகநாதரின் வீரத்தைக் குறிக்கும் வகையால்
"நின்றவர் நின்ற வாறே
நெருப்பென வாளை வீசிக்
கண்ணிமை இமைக்கு முன்னே
களத்தினில் பலரை வீழ்த்தும்"
என்று பாராட்டி வீரத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் ஆற்றல் சிறப்புக்குரியது.
"வெற்றிமகள் வருகை கண்டு
வேல்வீர மறக்குலத்து மாத ரெல்லாம்
சூலுற்ற வயிற்றையும் பெருமை யோடு
சுகமாகத் தடவிநிற்கும் தாய்மை யுண்டு"
என்று கூறும் வரிகள் அப்படியே புறநானூற்று வீரத்தாய்மார்களை நினையூட்டுகின்றன.

போர்க் களக்காட்சிகள்:
"விருந்துக்கும் வேட்கைக்கும்
ஆசை கொண்டு
பருந்துகளோ திரண்டுவந்து
வானை மூடும்"
என்றும்,

"முண்டங்கள் குன்று போலும்
முரிந்துவீழ் கைகால் எல்லாம்
துண்டங்கள் செய்த வாழைத்
துணுக்கெனக் கிடந்த தம்மா"

என்றும், போர்க்களக் காட்சிகளை விவரிக்கும் பாங்கு கலிங்கத்துப் பரணிக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்றன்.

உவமை:
அணிகளில் சிறந்தது உவமையணி. தமிழ் நாட்டுப் பாட்டிகள் வாயிலிருந்தும் வருவது உவமை அருவி. அத்தகு உவமையணியை ஏனோ கவிஞர் வெறுத்து விட்டார். ஓரிரு உவமை தவிர ஒளிமிகு காவியத்தில் உவமைகளைத் தேடி அலைந்தாலும் கிடைக்கவில்லை. அதனால் தானோ ஓரிடத்தில்,
"உவமானம் எதைச் சொல்லி உரைப்பேன்?" என்று கூறுகிறார்.

தலைவனை இழந்த படையின் நிலையைக் குறிக்கும் போது,
"இதயந்தான் மடிந்தபின்னே
உடலி லுள்ள
இருகரமும் கால்களுமே
என்ன செய்யும்"
என்று கூறும் போது ஓரிரு உவமைகள் தந்தாலும் உள்ளம் சிலிர்க்கச் செய்யும் உவமைகளைக் கையாண்டுள்ளார், கவிஞர்.
பொம்மை ராஜாவாக உடைய தேவனுக்கு முடிசூட்டுவதைக் கவிஞர், "அம்மிக்கு அலங்காரம் செய்வதைப் போல்" என்று கூறுவது உவமையின் உச்சிக்கே செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

சமதர்ம நோக்கு:
மருது பாண்டியன் கூற்றாக,
"முறையறிந்த மன்னவராய் இருந்தால் மட்டும்
முழுநிறைவு வாராது! மக்கள் நெஞ்சால்
நிறைவுகொளச் சமதர்மம் காணும் போதே
நீதியின் மைந்தரென ஏற்றுக் கொள்வார்"
என்று முடியாட்சி மன்னனும் சமதர்ம சமுதாயம் படைக்க விழைந்து கூறுவதன் மூலம் கவிஞரின் சமதர்ம நோக்கு தெளிவாக விளங்குகிறது.

தேர் செய்த சிற்பியை மன்னனெனச் செய்யும் நிகழ்ச்சியில்,
"தொழிலொன்றே முதலாகக் கொண்டு வாழும்
தொழிலாளி தானிந்த மன்னின் மன்னன்!"
என்று கூறுவதும் பாரதிதாசன் கவிதையில் தொடங்கிவைத்த சமதர்ம சிந்தனைக்குச் சீர் கூட்டுவதாக அமைந்துள்ளது.

சூழ்ச்சி:
சூழ்ச்சி இல்லாத காவியம் சுவைபடாது. மருது பாண்டியர் காவியத்திலும் சூழ்ச்சி உண்டு. சூழ்ச்சியின் மறு உருவான தொண்டைமானை,
"சொல்லாலே அன்புதனை வாரி வீசிச்
சூழ்ச்சியை நெஞ்சிற்குள் மறைத்து வைத்தே
எல்லோரும் எம்தோழர் இனியோர் என்றே
இனிப்பொழுகப் பேசுகின்ற தொண்டை மானும்"
என்று கூறுவது,
"கூப்புங்கை யில்கொடுவாள் உடையான் அந்தக்
கொடுங்கொடியோன் நரிக்கண்ணன் ......."
என்று பாண்டியன் பரிசில் பாரதிதாசன் கூறுவதற்கு ஒப்பாகச் சிறப்பு வாய்ந்த வரிகள்.

சாதி எதிர்ப்பு:
அன்றும் இன்றும் சாதியின் கொடிய கரங்களிலே சிக்கித் தவிக்கும் தமிழ் மக்கள் பற்றிய சிந்தனைஇன்பம் கவிஞருக்கு எழுந்துள்ளது. அதைக் கூறுமுகத்தால்,
"மருதுவின் சேர்வைச் சாதி
மண்ணிலே தாழ்ந்த தென்று
கருதிய உடைய தேவன்
கக்கினான் பொய்யை ஊரில்!
விருதெனும் வீர மெல்லாம்
வீணது சாதிச் சொல்லால்!"

என்று சொல்லும் போது சாதியின் முன்னே சாதனைகள் மண்டியிடும் என்பார் கவிஞர். சாதியிலிருந்து தமிழ்ச் சமுதாயம் மீள்வது எந்நாளோ?

போரினும் அமைதியே சிறந்தது:
வீரர்க்குப் போர்க்களம் விருந்து மேடை! வெற்றியெனும் கனிதன்னை அருந்தும் மேடை! நாட்டைக் காக்கப் போரிடலாம்! ஆனால், போரே வாழ்வு என்றால் நாடு சுடுகாடாய் மாறும்! அமைதியில் பூப்பதுதான் முன்னேற்றம் என்னும் அழகுப்பூ! இத்தகு உயரிய சிந்தனை கவிஞரின் கவிதையிலே உன்னதமாய் வெளிப்படுகிறது.
"போருக்கு வாடா என்று
போர்க்களம் நோக்கி நாமும்
போருக்கே அணிவ குத்தால்
போருக்குப் பின்னே நாடு
சீரற்று, சிறப்பு மற்று
சிவகங்கைச் சீமை மக்கள்
வேருக்குள் வெந்நீர் விட்டால்
விளைவுகள் என்ன வாகும்?"
என்று கூறும் போது விடுதலைக்குப் பிறகு பல போர்களைச் சந்தித்த நம் நாட்டின் பொருளாதாரம் எழுந்து நடக்கத் தடுமாறும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா?

கவித்திறன்:
மருது பாண்டியரின் வீர வரலாற்றைக் குறைவு படாமல் சுவையுடனும் தடைகாணா நடையுடனும் கூறியிருப்பது பாராட்டுக்குறியது. வேகம்! வேகம்! வேகம்! எந்த இடத்திலும் வேகத்தடையில்லை!
விருத்தங்களினால் அமைந்துள்ள இந்தக் காவியம் கற்கண்டுத் துண்டுகளாக இனிக்கின்றது.
கதையினைச் சொல்லி முடிக்க வேண்டுமே என்று, கவிஞர் ஓடும் வேகம் தெரிகிறது. சில இடங்களில் நின்று இன்னும் இலக்கியச் சுவைகளைத் தூவ முயற்சி செய்திருக்கலாம்!
எனினும் 'உணர்ச்சியே கவிதையின் உயிர் நாடி' என்பதை உணர்ந்து வீரம் வரும் போது எழுந்தும், சோகம் வரும் போது விழுந்தும், இன்பம் வரும் போது மகிழ்ந்தும், துன்பம் வரும் போது துவண்டும் மாறத் தவறவில்லை கவிஞர்! கோபம் வரும் போது எல்லை மீறிச் சொற்கள் வருவதும் சுவையாகத்தான் உள்ளது. இத்தகு நாடகப் பாங்கு (dramatic style) கம்பனைப்போல் இவரிடமும் அமைந்துள்ளது பாரட்டத்தக்கது.

இந்தக் காவியம் இரவா-கபிலனின் முதல் முயற்சி! இன்னும் பல வெற்றிகளை இவர் அடைவது உறுதி! உழைப்பும் ஆற்றலும் கற்பனைஇன்பம் கவித்திறம் உள்ள இக்கவிஞரைப் பாராட்டுவது என் கடமை!
அன்பன்
மு. பகத்சிங்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4