Thursday, January 04, 2007

அகமே புறம் - பகுதி 1

அகமே புறம்
-------------

அகத்தை யொத்தெ புறம்(வாழ்வு) அமைகின்றது. அகம் இடைவிடாது புறமாகிக் கொண்டிருக்கிறது. எதுவும் வெளிப்படாமல் இருப்பதில்லை. எது மறைபட்டிருக்கிறதோ அது சிறிது காலத்திற்கு மட்டுமே மறைபட்டிருக்கிற்து. அது முதிர்ந்து கடைசியாக வெளிப்பட்டே விடுகிறது.

வித்து,மலர்,கனி,இவை ஒன்றன் பின் ஒன்றாகவும்,ஒன்றிலிருந்து ஒன்றாகவும், எந்த முறையில் வெளிப்பட்டு நிலவுகின்றனவோ அந்த முறையிலேயே பிரபஞ்சமும் நிலவுகின்றது. மனிதனது அகத்தின் நிலைமையிலிருந்து அவனது புறத்தின் நிலைமைகள் வருகின்றன. அவனது நினைப்புக்கள் அவனது செயல்களாக மலர்கின்றன. அவனது செயல்கள் அவனுடைய ஒழுக்கமும் புற நிலைமையுமாகிய கனிகளைக் கொடுக்கின்றன.

மனிதன் தனது அகத்தின் அரசன்; தனது மனத்தின் காவலன்; தனது வாழ்க்கையாகிய
கோட்டையின் தனிக் காப்பாள்ன்.அவன் அந்த முறைமையில் ஊக்கமேனும் தூக்கமேனும் கொண்டிருக்கக்கூடும். அவன் தனது மனத்தை அதிகப்பிரயாசத்தோடு பாதுகாத்துச் சுத்தப்படுத்திக்கொள்ளக்கூடும்; அவன் நியாயமற்ற நினைப்புகளை நினையாது தன்னைக் காத்துக்கொள்ளக்கூடும்.

இஃது அறிவு விளக்கத்திற்கும் இன்பப் பேற்றிற்கும் மார்க்கம். இதற்கு மாறாக, அவன் தனது ஒழுக்கத்தைச்
சரியாகத் திருத்துவதாகிய மேலான கடமையைச் செய்யாது எச்சரிக்கையும் திருத்தமுமின்றி வாழக்கூடும். இஃது அறிவு மயக்கத்திற்கும் துன்ப அடைவிற்கும் மார்க்கம்..

ஒரு மனிதன் தன் வாழ்வு முழுவதும் தனது மனத்தினின்றே வருகிறதென்று அறிவானானால் அப்பொழுதே அவனுக்குப் பேரின்ப வீட்டின் வழி திறக்கப்பட்டிருக்கிறது. அவன் அப்பொழுது தனது மனத்தை ஆள்வதற்கும் தனது இலட்சியத்திற்குத் தக்கபடி தன்னைத் திருத்திக்கொள்வதற்கும் தக்க வலிமை தன்னிடத்தில் இருப்பதைக் காண்பான்.

அப்படியே அவன் முற்றும் மேம்பாடான நினைப்பையும் செயலையும் மேற்கோண்டு நேராகவும் உறுதியாகவும் நடப்பான். அவனுக்கு வாழ்க்கை இனியதாகவும் தூயதாகவும் அமையும். அவன் சிறிது முன்னகவோ பின்னகாவோ, சகல தீமைகளையும் சகல கவலைகளையும் சகல துன்பங்களையும்
போக்கிவிடுவான்.ஏனெனில்-

தனது அகத்தின் வாயிலைத் தளராத ஊக்கத்துடன் காத்து வருகிற ஒரு மனிதன் ஞானத்தையும் துக்க நிவர்த்தியையும்,சுகப் ப்ராப்தியையும் அடையாமல் இரான்.
நண்பர்களே... இந்தக் கட்டுரைத்தொடர் உங்களுக்கு உபயோகமாய் இருக்குமா எனத் தெரிவிக்கவும்...என்னைச் செதுக்கிய திரு ஜேம்ஸ் ஆலன் அவர்களின் மூலத்திலிருந்து....

--
அன்புடன்
சக பயணி
ரிஷி ரவீந்திரன்

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.. அதுவே புறமாக பரிணமிக்கிறது......."
"உன் மனத்தின் உயரமே... உன் வாழ்க்கையின் உயரம்..."

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4